வங்கி கடன் தவணை செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட சலுகையை நீட்டிக்கக் கூடாது என, தனியார் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.கடந்த மார்ச், 25ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அனைத்து கடன்களுக்கான தவணை செலுத்துவதை, மார்ச்-மே வரை, ரிசர்வ் வங்கி தள்ளி வைத்தது. பின், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் வரை, சலுகையும் நீட்டிக்கப்பட்டது.அதன்படி, கடன்தாரர்கள், செப்., முதல் கடன் தவணையை செலுத்த வேண்டும்.

இந்நிலையில், நேற்று(ஜூலை 27), ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றார்.பாதிப்புமுன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், எச்.டி.எப்.சி., தலைவர், தீபக் பரேக், சக்திகாந்த தாஸிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதன் விபரம்: ஏற்கனவே, வங்கிகள் வாராக் கடன் சுமையால் தவித்து வருகின்றன. கொரோனாவால் இந்த சுமை பலமடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளின் மொத்த வாராக் கடன், 2021, மார்ச்சில், 12.5 சதவீதமாக உயரும். கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தவறி, பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டால், வாராக் கடன், 14.7 சதவீதமாக உயரும்.இதில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 11.3 சதவீதத்தில் இருந்து, 15.2 சதவீதமாக அதிகரிக்கும். இது, தனியார் வங்கிகளில், 4.2 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாக உயரும் என, ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஊரடங்கு காரணமாக, வங்கி கடன் தவணையை ஆறு மாதங்களுக்கு செலுத்துவதில், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகை, வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்கக் கூடாது. வசதி உள்ளவர்களும், இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி, கடன் தவணையை செலுத்தாமல் உள்ளனர்.பரிசீலனைஏற்கனவே ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தவணை சலுகையை, மேலும் நீட்டித்தால், அது ஒட்டுமொத்த வங்கித் துறையை பெருமளவும் பாதிக்கும். எனவே, ஆகஸ்ட் மாதத்திற்கு மேல், கடன் தவணை சலுகையை நீட்டிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்து சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக, ஆறு மாதங்களுக்கு கடன் தவணை செலுத்துவது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.அதனால், அது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. எனினும், கடன் தவணை சலுகை தொடர்பான பரிசீலனையின் போது, தீபக் பரேக்கின் கருத்தும் ஆராயப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, பொதுத் துறையைச் சேர்ந்த எஸ்.பி.ஐ., தவணை சலுகையை நீட்டிக்க கூடாது என, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, எச்.டி.எப்.சி.,யைத் தொடர்ந்து, தனியார் துறையைச் சேர்ந்த மேலும் பல வங்கிகள், சலுகை நீட்டிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.முக்கிய அம்சங்கள்இந்திய தொழிலக கூட்டமைப்பு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் பேசியதாவது:

* அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மிகப் பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுகிறது. இதில், பொது மற்றும் தனியார் துறைகள் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும்.

* அடிப்படை கட்டமைப்பு துறையில் அதிகரித்து வரும் முதலீடு, கொரோனாவால் தாக்கத்தை சந்தித்துள்ள பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

* வேளாண் துறையில் சமீபத்தில் அமலான சீரிய சீர்திருத்தங்கள் ஏராளமான புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன. அவற்றின் பயனை அறுவடை செய்யும் நோக்கில், நம் இலக்கை மாற்றி அமைக்க வேண்டும்.

* விவசாயிகளின் வருவாய் நிரந்தரமாக அதிகரிக்கும் வகையில், கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

* தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு, மின் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

* அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பிற்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே சமயம், மதிப்பில் ஏற்படும் அசாதாரண ஏற்ற, இறக்கங்களை, ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here