கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 

0
241

 தமிழ்நாட்டில் 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை அரசு பேருந்துகளால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் பேரவையில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று செவ்வாய்கிழமை போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அதில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரை விபத்தில் சிக்கிய அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் 8 சதவீதமாகும்.

2013-14-ஆம் ஆண்டில் 1,318 பேரும், 2014-15-ஆம் ஆண்டில் 1,331 பேரும், 2015-16-ஆம் ஆண்டில் 1,460 பேரும், 2016-17-ஆம் ஆண்டில் 1,373 பேரும், 2017-18-ஆம் ஆண்டில் 1,085 பேரும் உயிரிழந்துள்ளனர். 

எனவே, விபத்துக்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பேருந்துகளை ஓட்டும் போது ஓட்டுநர்கள் செல்லிடப்பேசியில் பேசுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் மூச்சு பரிசோதனை நடத்தி வருகின்றனர். நீண்டநேரம் இயக்கப்படும் பேருந்துகளை ஓட்டும் டிரைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. விபத்து நடைபெறும் அபாய பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துதல், சாலை வசதி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேரவையில் தெரிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-2017-ஆம் ஆண்டில் அரசு பேருந்து விபத்துக்களால் 1,373 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் 2017-2018-ஆம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,086 ஆக குறைந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.80 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிக தொகை. இவை முழுவதையும் அரசால் வழங்க இயலாது. எனவே பயணிகளிடம் இருந்து ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது.
அதாவது பயணிகளிடம் இருந்து டிக்கெட்டில் ரூ.1 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் விபத்து காப்பீடு வழங்கப்படும். கடந்த ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here