நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து கடந்த 2017-18-ல் 6.1 சதவீதமாக உள்ளது. இந்த தகவலை தேசிய கருத்துக்கணிப்பு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு கடந்த டிசம்பர் மாதமே தேசிய புள்ளியியல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இருப்பினும், இந்த தகவலை வெளியிட தாமதம் ஆகியிருப்பதாக கூறி தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் உள்பட 2 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

வேலைவாய்ப்பின்மை குறித்த தகவல்கள்

*பொதுத் தளத்தில் வேலை வாய்ப்பின்மை குறித்த விவரங்களை பார்க்க முடியவில்லை. இந்த தகவலை பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் (Business Standard ) செய்தித்தாள் சேகரித்து வெளியிட்டது.

*கடந்த 1972-73-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் உள்ள விவரங்களின்படி வேலை வாய்ப்பின்மை சதவீதம் தற்போது மிகவும் அதிகரித்திருக்கிறது.

*2011-12-ஆம் ஆண்டின்படி வேலை வாய்ப்பின்மை சதவீதம் 2.2 சதவீதமாக இருந்தது. இதில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் சதவீதம் 13-இல் இருந்து 27 சதவீதமாக அதிகரித்துள்ளது.

*நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை 7.8- சதவீதமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை 5.3 சதவீதமாக இருக்கிறது.

*கூலித் தொழிலாளிகளாக பணியாற்றுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

*தேசிய சர்வே அலுவலகம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்திருக்கிறது.

*வேலை வாய்ப்பின்மை குறித்த விவரங்களை வெளியிடாதது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர் பி.சி. மோகனன், உறுப்பினர் ஜே.வி. மீனாட்சி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர். தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பதவியை ராஜினாமா செய்திருக்கும் மோகனன் மற்றும் மீனாட்சி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

*அரசு தரப்பில் கேட்கப்பட்டபோது, வேலை வாய்ப்பின் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

*தேசிய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பின்மை குறித்து மதிப்பீடு செய்வதை இன்னும் முறைப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.