ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களிடம் வடபழனி இன்ஸ்பெக்டர் மாமூல் வசூல் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பால் மாநகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், வடபழனி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா தடையின்றி அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, வடபழனி சன்னதி தெருவில் பூட்டப்பட்டுள்ள ஜெயின் திருமண மண்டபத்திற்கு வடபழனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன் தினமும் மாலை ரோந்து பணியில் ஈடுபடுவது போல் வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்போது, கள்ளச்சந்தையில் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்ய வியாபாரிகள் சிலர் இன்ஸ்பெக்டர் கண்ணனை நேரில் சந்தித்து மாமூல் கொடுத்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கஞ்சா வியாபாரி ஒருவர், இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு மாமூல் கொடுப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
* காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைதொடர்ந்து வடபழனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணனை சென்னை மாநகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.