கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் கால்நடைகளுக்கு போதிய தீவணங்கள் கிடைக்காமல் திண்டாடுவதாகக் கூறும் விவசாயிகள், கூடுதல் தீவணங்கள் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், மீதமுள்ள கால்நடைகளை காப்பாற்ற பெரும்பாடுபட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

கனமழை காரணமாக தலைஞாயிறு, வண்டல், குண்டூரான் வேலி, பழையாற்றங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை இணைக்கும் சாலை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இப்பகுதி மக்கள் படகுகளையே நம்பியுள்ளனர். புயலில் தப்பித்த கால்நடைகளை காப்பாற்ற வைக்கோல், தீவனம் உள்ளிட்டவற்றையும் படகுகள் மூலமே அவர்கள் கொண்டு வருகின்றனர்.

கால்நடைத்துறை சார்பாக ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு கலப்பு தீவனம் ஒரு கிலோவும், வைக்கோல் ஒரு நாளைக்கு 3 கிலோவும் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறும் விவசாயிகள், அவை போதுமானதாக இல்லை என்றும் கூறுகின்றனர். ஒரு வீட்டில் ஒரு மாட்டுக்கு என்ற வீதத்தில் மட்டுமே தீவனங்கள் வழங்கப்படுவதாகவும் இதனால் மீதமுள்ள கால்நடைகள் பட்டினி கிடப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அந்தத் தீவனமும் முறையாக தங்களுக்கு வந்து சேர்வதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே தீவனங்களின் அளவை அதிகப்படுத்தி கால்நடைகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்