கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், புயல் பாதிப்புகளை மத்திய குழு ஒன்று மதிப்பிட்டுச் சென்றுள்ளது.

நிவாரண பணிகளை பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கஜா புயல் நிவாரண நிதிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன அரிசியை” சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் “கிராம நிர்வாக அதிகாரிகள்” கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”.

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது.

இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here