மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1,146.12 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இடைக்கால நிவாரண நிதியாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு விடுவித்திருந்தது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு கஜா புயல் கரையைக் கடந்த போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர் புயல் நிவாரண நிதி கோரி தில்லியில் பிரதமரை நவம்பர் 22ஆம் தேதி நேரில் சந்தித்து ரூ. 15 ஆயிரம் கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, மத்திய அரசின் குழு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்தது. பின்னர், டிசம்பர் 3ஆம் தேதி இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கள்கிழமை உயர் நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் போது, கஜா புயல் கூடுதல நிவாரணமாக தமிழகத்துக்கு ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு கூடுதல் நிதி உதவியாக தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியில் (என்டிஆர்எஃப்) இருந்து ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு செய்ய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மாநில மக்களுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மத்திய அரசு மாநில பேரிடர் நடவடிக்கை நிதியில் (எஸ்டிஆர்எஃப்) இருந்து இடைக்கால உதவியாக ரூ.353.70 கோடியை விடுவித்திருந்தது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்