ஔரங்கசீப்பும் அப்துல்கலாமும்: மோடி ஆட்சியின் இந்துத்துவம் ஓர் அலசல்

பக்தர்கள் விரும்பாத பிரிவினைவாதத்தைக் கடைபிடிக்கிறது பா.ஜ.க

0
4858
குதிரை மேல் சவாரி செய்யும் அவுரங்கசீப்.

பேரா.அ.மார்க்ஸின் “ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்” கட்டுரைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் மோடி அரசின் இந்துத்துவப் போக்கையும் சனநாயக விரோதங்களையும் அம்பலப்படுத்துகிறது. அ.மா.வைப் பொறுத்தமட்டில் மோடி அரசு என்பதல்ல, இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைப்பதையே தனது அரசியல் நிலைப்பாடாகக் கொண்டிருக்கும் இந்துத்துவக் கும்பலின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி இந்திய முஸ்லிம்களின் நிலை, பன்மைத்துவத்திற்கு நேரும் ஆபத்து ஆகியன பற்றிச் சிந்திக்கத் தொடங்கியவர் அவர். தான் சிந்தித்தவற்றை அவ்வப்போது மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார். முதலில் மக்கள் மத்தியில் நிலவும் முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்துக்களைப் போக்கும் நோக்கில் அவரது ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்” (1993) நூல் வெளிவந்தது. தொடர்ந்து பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது. இக்காலத்தில் அவர் தீவிரமாக இந்துத்துவத்தின் செயல்பாடுகளை ஆராய்கிறார். அது ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு” (1999) என்ற நூலாக வெளிப்படுகிறது. பின் அவர்கள் ஆட்சியில் கல்வித் துறையைக் காவித்துறையாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.. அப்போது ‘பாட நூல்களில் பாசிசம்’ (2003) நூல் மூலம் அதை வெளிப்படுத்துகிறார். ஆட்சியில் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து இந்துத்துவச் செயல்பாடுகளையும் கூர்மையாக அவதானித்து ஆட்சியில் இந்துத்துவம், (2001) இந்துத்துவத்தின் இருள்வெளிகள் (2004) நூல்கள் வருகின்றன. குஜராத் படுகொலைகளை ஒட்டி இரண்டு நூல்கள் வருகின்றன. கிறிஸ்தவ மக்கள் மீது ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடந்த தாக்குதல்கள் பற்றி அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்த கட்டுரைகள் நூலாக வருகிறது. பாபர் மசூதித் தீர்ப்பை ஒட்டி இரு நூல்கள்… இப்படியான வரிசையில் இந்துத்துவத்தின் ஆகக் கொடிய அவதாரமாகிய நரேந்திர மோடி முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபோது அந்த ஆட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து ஓராண்டு முடிவில் அதன் அத்துமீறல்கள் பற்றிய விமர்சனம் ‘இது மோடியின் காலம்’ எனும் நூலாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தவற்றைச் சொல்லும் நூல் இது.

பொதுவாக அ.மாவின் நூல்கள் வெறும் தகவல்களாக இல்லாமல் அவர் பல துறைகளில் ஒரு சேர எழுதுவதாலும் இயங்குவதாலும் அவை ஒரு வரலாற்று ஆவணங்களாகவும் சிறந்த ஆய்வுகளாகவும் அமைகின்றன. இந்த நூலைப் பொருத்தமட்டில் இவற்றில் பேசப்படும் கட்டுரைகளை இவ்வாறு பகுக்கலாம் : 1.கல்வித் துறையில் மோடி அரசு செய்துள்ள தலையீடுகள். 2.சிறுபான்மையினர் பண்பாட்டின் மீதான வன்முறைகள் 3. எழுத்தாளர்கள் படுகொலை, விருதுகளைத் துறப்பதன் அரசியல் 4.பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதவாதம் அணுகவேண்டிய முறை 5.இந்துத்துவவாதிகள் நேருவைக் காய்வதன் பின்னணி 6. மோடி ஆட்சியில் கவனிக்கத் தவறும் அம்சங்கள் 7.இந்து – இந்துத்துவம் வேறுபாடு.

இன்றைய ஆட்சியில் கல்வி நிலையங்கள் படும்பாட்டை நாடறியும். முந்தைய பா.ஜ.க ஆட்சியில் அவர்களின் கல்வித்துறைத் தலையீடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறார் அ.மா:

1.கல்வித்துறை சார்ந்த முக்கிய நிறுவனங்களில் தகுதிமிக்க அறிஞர்களை நீக்கிவிட்டுத் தக்க தகுதிகள் அற்ற சங்கப் பரிவார ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புதல்.

இப்படி சங்கப் பரிவாரங்களைக் கொண்டு நிரப்புவதன் விளைவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு பேரா.சந்தீப் பாண்டே. புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இடதுசாரிச் சிந்தனையுடையவர். பனாரஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். தனது சமூகப்பணிகளுக்காக மகசேசே உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ஊழலுக்கு எதிரான தனது குரலை வலுப்படுத்துவதற்காக 2011ஆம் ஆண்டு மகசேசே விருதை அரசிடமே திருப்பி அளித்தவர். மோடியின் தேர்தல் வெற்றிக்குப் பின் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரிஷ் சந்திர திரிபாதி என்ற ஆர்.எஸ்.எஸ்காரர் நியமிக்கப்படுகிறார். பின்பு எல்லாமே திட்டமிட்டதைப்போல் நடக்கிறது. பேரா.சந்தீப்பிற்கு எதிராக மாணவர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள். உள்ளூரின் செய்தி இணையதளம் ஒன்று அவரைக் குறித்து அவதூறு செய்தி ஒன்றைப் பரப்புகிறது. ஒரு காந்தியவாதியான அவரை ஆயுதம் தாங்கிய கொரில்லா இயக்கத்தில் பங்கெடுத்தவராக சித்தரிக்கிறது. வெகுவிரைவில், “விரும்பத்தகாத செயல்பாடுகளை” மேற்கொண்டதற்காகவும் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும் துணைவேந்தர் திரிபாதியின் பரிந்துரையின் பேரில் சந்தீப் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். தனது பணிநீக்கம் குறித்து திரிபாதியைச் சந்தித்துக் கேட்டபோது,

திரிபாதி சொல்கிறார் : நீங்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் வேலை செய்துகொண்டு அமெரிக்க அரசை எதிர்க்க முடியுமா?

சந்தீப் : நிச்சயமாக..

திரிபாதி : அமெரிக்காவில் உங்களால் முடியலாம், இந்தியாவில் முடியாது..

இப்படித்தான் தங்களின் கொள்கைகளோடு முரண்படுகிற யாரையும் வளாகத்தைவிட்டு அவர்கள் வெளியேற்ற விரும்புவதாகப் பேரா.சந்தீப் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2.பாடநூல்களைக் குறிப்பாக வரலாற்றுப் பாடநூல்களைத் திரித்து எழுதுதல்.

3.சிந்துவெளி நாகரிகம், ஆரியர் வருகை உள்ளிட்டவற்றின் ஆய்வு முடிவுகளுக்கு எதிரான கருத்துகளைப் பாடநூல்களில் புகுத்துதல்.

4.ஜோதிடம், புரோகிதம் ஆகிய அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளைப் பல்கலைக்கழகப் பாடங்களாகத் திணித்தல்.

5.தனியார் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பெருக்கத்திற்கு வழியமைக்கும் வகையில் கல்விக்கொள்கையை மாற்றி அமைத்தல்.

சென்ற ஆட்சிக்காலத்தில் இப்படித்தான் கல்வித்துறையில் மூக்கை நுழைத்தார்கள். இந்த முறை மோடி அரசு இன்னும் ஒரு படி மேலே சென்றது. கல்வித்திட்டம், அதிகாரிகள், கல்விக்கொள்கை என்று சுற்றி வளைக்காமல் மாணவர்கள் மீதே நேரடியான தாக்குதலைத் தொடுத்தது. இந்த வகையில்தான் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் மாணவர் வட்டத்தின் ஏற்பு ரத்து செய்யப்பட்டதும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதும் ரோஹித் வெமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்டதும் நிகழ்ந்தது. இந்தப் பிரச்சினைகளைக் குறித்து அ.மா சில முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதையும் படியுங்கள்: யார் இந்த அசீமானந்தா?

ஐ.ஐ.டி பிரச்சினையில் கருத்து கூறிய ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ராதாராஜன் (ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அதே நபர்) அங்கு 2006இல் ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ.பட்டப்படிப்பு தொடங்கப்பட்டதில் இருந்துதான் இத்தகைய பிரச்சினைகள் தொடங்கியதாகச் சொல்லியிருக்கிறார். குறிப்பாக அந்தப் பாடத்திட்டம் “பன்மை ஒழுங்கு அணுகல்முறையுடன்” அமைந்திருப்பதும் இத்தகைய சீரழிவுகளுக்குக் காரணம் என்கிறார் அவர். அதாவது பலதுறைகளையும் ஒருங்கிணைத்துக் கற்பது (Interdisiplinary perspective). சமூகவியல், மானுடவியல், பெண்ணியம், தலித்தியம் என எல்லாவற்றையும் அலசிப்பார்ப்பது. இந்தக் கல்விமுறையைத்தான் தேசம், தேசியம் என்ற வரலாற்றுத் தரவுகளை மறுப்பதற்குப் பயன்படும் முறை என்று வெறுத்தொதுக்குகிறார் ராதாராஜன். ஆக, இவர்களின் ஒற்றை மந்தை மனப்பான்மைக்கு இந்தப் பல்துறைக்கல்வி எதிராக இருப்பதை இவர்கள் மனம் வெளிப்படுத்துகிறது என்பதை அ.மா அடையாளம் காட்டுகிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கன்னையா குமார் உட்பட எட்டு மாணவர்கள் தேசத்துரோகம், கிரிமினல் சதி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் அ.மா., டாக்டர் பாலகோபாலின் இந்தக் கூற்றை நினைவுபடுத்தி இருப்பது பொருத்தமானது : “இப்போது மனுதர்மத்தை மீண்டும் நிலைநாட்ட வருபவர்கள் பழைய மாதிரி “வருண தர்மத்தைக் காப்பது என்று சொல்லிக்கொண்டு வரமாட்டார்கள். மாறாக “தேசம்” “தேசபக்தி” என்று சொல்லிக் கொண்டுதான் வருவார்கள்”.

உண்மை. அவர்கள் அப்படித்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு எடுத்துக்காட்டு : டெல்லி ரம்ஜாஸ் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஜெ.என்.யூ மாணவர் உமர் காலித்தை அனைத்திந்திய மாணவர் இயக்கம் அழைத்திருந்தது. இதை எதிர்த்து ஏபிவிபியினர் போராட்டம் நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. இதைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் இயக்கமும் மாணவர்களும் அமைதியான வழியில் போராட்டம் நடத்திய பொழுது ஏபிவிபி மாணவர்கள் புகுந்து நடத்திய வன்முறை ஆட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்திலையில் டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி குர்மெஹர் கவுர் “நான் ஏ.பி.வி.பி.யைக் கண்டு பயப்படவில்லை” என்று துணிந்து வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அதைப் பற்றி கருத்துத் தெரிவித்த பி.ஜே.பி.யைச் சேர்ந்த அமைச்சர் அனில் விஜ் இப்படிச் சொல்லியிருக்கிறார் : குர்மெஹருக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள். அவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

அதாவது தங்களின் கொள்கைக்கு எதிரானவர்களை எல்லாம் இந்த தேசத்தின் எதிரிகளாகவே அவர்கள் கட்டமைத்து வருகிறார்கள். ஜெ.என்.யூ மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கைத் தொடுத்ததும் இந்த அடிப்படையில்தான்.. இப்படி ஒருபக்கம் எதிரிகளைக் கட்டமைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எதிரிகளை ‘இல்லாமல் ஆக்குகிறார்கள்’. ரோஹித் வெமுலா அப்படித்தான் ஆக்கப்பட்டார்.

ரோஹித் வெமுலாவுடையது வெறும் தற்கொலையல்ல அது ஒரு நிறுவனப் படுகொலை என்று சொல்லும் அ.மா, கல்வி நிறுவனங்களுக்குள் பட்டியல் சாதி மாணவர்களுக்கு ஏற்படும் இழிவுகள் தண்டனைக்குரிய குற்றங்களாக வரையறுக்கப்பட்டு அவை பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது முக்கியமானது.

அடுத்தது சிறுபான்மையினரின் பண்பாடு மீதான தாக்குதல்.. இந்தியாவை இந்து தேசமாக்கும் முயற்சியை பா.ஜ.க தொடர்ந்து செய்து வருகிறது. அதன் ஒரு கண்ணி தான் மாட்டுக்கறி மீதான அரசியல். இப்படி உணவில் மட்டுமல்ல உடை சார்ந்த பண்பாட்டிலும் அவர்கள் தலையிடுகிறார்கள். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.பி.வி.பி அமைப்பினர் காவி ஷால் அணிந்து வகுப்பறைக்கு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. வகுப்பறைக்குள் மத அடையாளங்கள் கூடாது என்பதை வலியுறுத்தி இப்படிப் போராடுகிறார்களாம். அப்படியென்றால், மாணவர்கள் விபூதி, குங்குமம் பூசிக்கொண்டு வருவது மத அடையாளம் இல்லயா? அந்த அடையாளங்களுக்கு அனுமதி மறுத்தால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா?.

உத்தரப்பிரதேசம் தாத்ரி வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முகமது அக்லக் அவரது வீட்டில் இறைச்சிக்காக மாட்டைக் கொன்றதாகக் கிளப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையில் அடித்தே கொல்லப்பட்டார். அவர் மகன் படுகாயமடைந்தார். உ.பி.யில் உள்ள பசுவதை தடுப்புச் சட்டத்தின்படி பசுவைக் கொல்வதென்பது ஜாமீனில் விடுதலையாகக்கூடிய குற்றம்தான்.. இதில் ஒரு உயிரைக் கொடூரமாகக் கொலை செய்ததன் மூலம் இது ஒரு ‘இந்து தேசம்’ என்று நிறுவ முயல்கிறது பா.ஜ.க. கும்பல். ஆனால் இந்தப் படுகொலைக்குப் பிறகும் இது ஒரு “இந்திய தேசம்’தான் என்று மார்தட்டிக் கொள்வதற்கும் நமக்கு வாய்த்திருக்கிறது. தாத்ரி படுகொலையை முன்வைத்தே அந்த அம்சத்தை அ.மா சுட்டிக்காட்டுகிறார்.

அன்று தாத்ரியில் முகமது அக்லக் மட்டுமல்ல, அதே பகுதியைச் சேர்ந்த ரெஹ்முதீனும் தாக்கப்பட்டார். ரெஹ்முதீன் சொல்கிறார் : “அவங்க என்னைப் பிடித்து சுவற்றில் மோதினாங்க. அடிச்சாங்க. முஸ்லிம்கள் பசுவைக் கொல்றீங்கன்னு கத்தினாங்க. நான் இல்லை இல்லை என்றேன். அவங்க கேட்கல. வீரவதி அம்மா இல்லன்னா நான் அன்னிக்கு செத்திருப்பேன்”

ஆம்..வீரவதி..ஒரு இந்து மூதாட்டி.. தடுக்கப் போனால் தன்னையும் அடிப்பார்கள் என்று பயந்தபோதும் ஓடிச்சென்று காப்பாற்றி இருக்கிறார். “இன்னிக்குத்தான் வேண்டிய அளவு எல்லாரையும் அடிச்சிருக்கீங்களே வீட்டுக்குப் போங்கன்னு” கெஞ்சிய அந்த அம்மையார் கேட்கிறார் : பசு இறைச்சியாத்தான் இருக்கட்டுமே, அதுக்காக கொல்றதா?
“இதுதான் சராசரி இந்துக்களின் பொதுப்புத்தி. இதில் விஷம் கலப்பதுதான் இந்துத்துவத்தின் யுத்தி” என்று அ.மா சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்கது. இங்கு மட்டுமல்ல நூலின் வேறு இடங்களிலும் இதுபோன்ற வன்முறையற்ற இந்து மனங்களைக் கண்டு அவர் மனம் கசிகிறார். “இராமன் எத்தனை இராமனடி” கட்டுரையில் அவர் இரண்டு இந்துக்களைப் பற்றிப் பேசுகிறார். ஒருவர் மொராரி பாபு. மற்றொருவர் யுகல் கிஷோர் சாஸ்திரி.

மொராரி பாபு, புகழ்பெற்ற இராமாயண கதைசொல்லி. அது மட்டுமல்ல விசுவ இந்து பரிஷத்துடன் நெருக்கம் கொண்டவரும்கூட. ‘ராம் கே நாம்’ ‘ஜெய் பீம் காம்ரேட்’ உள்ளிட்ட புகழ்பெற்ற ஆவணப்படங்களை இயற்றிய ஆனந்த் பட்வர்தனுக்கு மொராரியின் அமைப்பு விருதொன்றை வழங்குகிறது. ”ஶ்ரீ மொராரி பாபுவும் சத்பவனா குழுவும் அளிக்கும் இவ்விருதைப் பணிந்து ஏற்கிறேன்” என்று சொல்லி ஆனந்த் பட்வர்தன் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார். காரணம், ஒரு இந்துவாக இருந்தபோதும் மொராரி இந்துத்துவவாதியாக இருந்ததில்லை என்பதுதான். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி விசுவ இந்து பரிஷத்திடமிருந்து அவர் விலகிவிடவில்லை. குஜராத் 2002ஐ ஒட்டி மோடியைக் கண்டிக்கவில்லை. ஆனால், அவற்றைக் கண்டிக்கும் முகமாக அவர் அமைதி யாத்திரை ஒன்றை நடத்தினார். வன்முறையாளர்களிடம் இருந்து தன்னை ஒதுக்கி நிறுத்திக்கொண்டார். சமூக ஒற்றுமை மற்றும் அமைதிக்கான “சத்பவனா பாரம்” ஒன்றை அக்கறையுள்ள மக்கள் நிறுவியபோது அதோடு தன்னை இணைத்துக் கொண்டார்.

யுகல் கிஷோர் சாஸ்திரி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இராமர் கோவிலுக்குச் செல்லும் வழியிலுள்ள ‘இராமர் ஜானகி’ கோவிலின் மகந்த் இவர். ரொம்பவும் எளிமையானவர். அயோத்தியின் பன்மைக் கலாச்சாரத்தைக் காப்பதற்காக இந்துக்கள், முஸ்லிம்கள் எல்லோரும் பங்குபெறும் ‘வாய்ஸ் ஆப் அயோத்தியா’ எனும் அமைப்பைச் செயல்படுத்தி வருபவர். ஸபார் சைபுல்லாஹ் 1993 – 94 கட்டத்தில் மத்திய அமைச்சரவைச் செயலராகப் பணியாற்றியவர். இதுவரை இந்தியாவில் கேபினட் செகரட்டரியாக இருந்த முஸ்லிம் இவர் ஒருவரே. மத ஒற்றுமை, சமூக அமைதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வந்த அவர் 2015 ஆகஸ்ட் 14இல் மறைந்தார். அவர் நினைவைப் போற்றும் வகையில் உத்திரபிரதேசத்தின் முக்கிய வீதிகளில் “ஸபார் சைபுல்லாஹ் சத்பவன” யாத்திரை கிட்டத்தட்ட 95,000 ரூபாய் செலவில், யுகல் கிஷோர் சாஸ்திரியால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உண்மை அறியும் குழு அமைத்து அயோத்தியா சென்றபோது தங்களுக்குப் பெரிதும் உதவியவர் இவர் என்கிறார் அ.மா.

ஆக, இரண்டு இந்துக்கள். இருவரும் இராமனில் நம்பிக்கை உடையவர்கள். இறுதியாக இவர்களைப் பற்றி இப்படி முடிக்கிறார் அ.மா : நம்பிக்கைகள் தன்னளவில் தீமையானவை அல்ல. அவை அரசியலாக்கப்படும்போதுதான் கொடூரமாகின்றன. சாஸ்திரியும் பாபுவும் ராம பக்தர்கள்தான். ஆனால் அவர்கள் ஒருபோதும் இராமனின் பெயரால் நடக்கும் வன்முறைக்குத் துணை போகாதவர்கள் மட்டுமல்ல, அவற்றை எதிர்ப்பவர்களுங்கூட. ராமனை இவர்கள் வேறுவகையில் வாசிப்பவர்கள்; வணங்குபவர்கள்; போற்றுகிறவர்கள். எல்லோரையும் ஒன்றேபோலப் பார்ப்பது அபத்தம்.
இந்த இருவரை மட்டுமல்ல, காந்தி கொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று நேரு சொல்லியபோது அதை அப்படியே ஏற்றுக்கொண்ட வல்லபாய் பட்டேல், வலதுசாரி கருத்தியல் கொண்ட இராஜாஜி போன்றவர்களையும் கூட இந்துத்துவவாதிகள் என்று ஒற்றை முத்திரை குத்திவிட முடியாது என அ.மா சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன். உண்மையில் அது ஒரு தண்டனையல்ல, பழிவாங்கல் அணுகல்முறை என்று விளக்கியிருப்பதும் இரவெல்லாம் விழித்திருந்து தண்டனை நிறைவேற்றத்திற்கு (காலை 6.30 மணி) சற்று முன்பு தான் அந்தக் கட்டுரையை முடித்திருப்பதும் மனித உரிமைகள் குறித்த அவரது கரிசனத்தைக் காட்டுகிறது. நூல் இன்னும் பல்வேறு தளங்கள் குறித்துப் பேசுகிறது. டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலையை அப்துல்கலாம் சாலையாக பெயர் மாற்றியதைக் கண்டித்து, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் அல்லது வேறெந்த மன்னாதிமன்னர்களும் செய்யாத கொடுங்கோல் ஆட்சியையா ஔரங்கசீப் மட்டும் செய்துவிட்டார் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதும் பா.ஜ.க.வே வரித்துக்கொள்கிற அளவிற்கு அப்துல்கலாம் எப்படி ஒரு ‘நல்ல முஸ்லிமாக’ வாழ்ந்து மறைந்தார் என்று நினைவு கூர்ந்திருப்பதும் நேருவை இந்துத்துவவாதிகள் தொடர்ந்து காய்ந்து கொண்டிருப்பதன் பின்னணியை விளக்கியிருப்பதும் படித்து அறியத்தக்கவை… விரிவஞ்சி ஒரே ஒரு செய்தி மட்டும் இங்கே :

இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம். ஆட்சியிலும் வெளியிலும் இருந்த இருந்த இந்துத்துவவாதிகள் வைத்த கோரிக்கை, சோமநாதபுரம் கோவிலை அரசு செலவில் புதுப்பித்து குடமுழுக்கு செய்யவேண்டும் என்பது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இதைக் கடுமையாகக் கண்டித்தார். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆலயக் குடமுழுக்கை அரசு நடத்துவது மிக மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்று சொல்லி மறுத்தார். ஆனாலும் வேறு வழியில்லாமல் காந்தி சொல்லியபடி அரசும் ஆலயக்குடமுழுக்குக் குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்து வேலைகளைச் செய்தது.. பணிகள் முடிந்து குடமுழுக்கு நாளன்று தானும் கலந்து கொள்ளப்போவதாகக் குடியரசுத்தலைவர் ராஜேந்திரபிரசாத் பிடிவாதமாகச் சொன்னார். இறுதிவரை நேரு அதற்குச் சம்மதிக்கவில்லை. ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தலைவராக உள்ளவர் ஒரு தலைவர் என்கிற முறையில் ஒரு மத நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது. அவர் தனிப்பட்ட முறையில் தன் பக்தியைச் செலுத்த வேண்டுமெனில் எந்த அரசு ஆடம்பரங்களும் இன்றி தனிப்பட்ட முறையில் அதைச் செய்வதே தகும் என்பதே நேருவின் கொள்கையாக இருந்தது. அதில் அவர் உறுதியாக இருந்தார். இறுதியாக பிரசாத்தும் எந்த அரசு மரியாதையும் இன்றி சாதாரண பக்தனாகவே சென்றுவர நேர்ந்தது.

சென்றமாத சிவராத்திரியன்று ஈஷா மையத்திற்கு பாரதப்பிரதமராகவே வந்த மோடி 112 அடி உயர ஆதியோகி சிலையைத் திறந்துவைத்துவிட்டு, வனச்சட்டங்களை மீறி அரசு அனுமதியின்றி சிலை எழுப்பியதோடு கொலை, கொள்ளை, மனித உரிமை மீறல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஜக்கி வாசுதேவை ஆரத்தழுவி புளகாங்கிதம் அடைந்துவிட்டுப் போனதை இங்கே நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியாது.

ஒருசேரப் பார்த்தால் நாடு மிக வேகமாக இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகரும் ஆபத்தைத் தான் இந்தக் கட்டுரைகள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அனைவரும் ஒருமுறை புரட்டிப் பார்த்திருக்க வேண்டிய புத்தகம் இது.

இதையும் படியுங்கள்: சமூக ஊடக அரசியல்: அம்பலமாகும் ரகசியங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்