Courtesy: bbc

ஜூன் 23ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் பொதுக் குழு கூட்டத்திலிருந்து தானாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையிலிருந்தும் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது எப்படி?

ஜூன் 23ஆம் தேதி வானகரத்தில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில், தொடர்ந்து எழுப்பப்பட்ட எதிர்ப்புக் கோஷங்களுக்கு மத்தியில் வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம். அவரைக் குறிவைத்து தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன. கட்சியின் தலைமைப் பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும்கூட, இப்படி வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்த இரண்டு தருணங்களில் அவரால் முதலமைச்சராக்கப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். 2001 தேர்தலில் வெற்றிபெற்று வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தண்டிக்கப்பட்டதையடுத்து பதவியிழக்க நேரிட்டது. அந்தத் தருணத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்கள் என காத்திருந்தபோது, ஓ. பன்னீர்செல்வத்தைத் தேர்வுசெய்தார் ஜெயலலிதா.

அந்தத் தேர்வு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், அதற்கு முன்பாக, எவ்விதத்திலும் செய்திகளில் அடிபடாத ஓர் அரசியல்வாதியாகவே இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் அவரை முதலமைச்சராக்கினார் ஜெயலலிதா.

2002 ஆண்டு மார்ச் மாதத்தில், அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதும், உடனடியாக முதல்வர் பதவியை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார் ஓ.பி.எஸ். அதற்குப் பிறகு, மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.

2014 ஆண்டு செப்டம்பரில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தபோதும், ஜெயலலிதாவின் தேர்வு ஓ. பன்னீர்செல்வமாகவே இருந்தார். அடுத்த ஆண்டே மேல் முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன் பதவியை முன்பைப்போலவே ஒப்படைத்தார் ஓ.பி.எஸ்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா உடல்நலம் குன்றியபோது, முதல்வரின் பொறுப்புகளை ஓ. பன்னீர்செல்வமே மேற்கொண்டார். ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சியைத் தன் பிடியில் வைத்திருந்த வி.கே. சசிகலா, மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.

இந்த மூன்று தருணங்களிலுமே, கட்சிக்குள் தனக்கிருந்த ஆதரவால் அல்லாது, கட்சியின் தலைமை அளித்த பொறுப்புகளில் ஒன்றாகவே முதல்வர் பதவியை வகித்தார் ஓ. பன்னீர்செல்வம். அப்போதுவரை, அவருடைய உண்மையான மக்கள் செல்வாக்கு என்னவென்று வெளிப்படையாக யாருக்கும் தெரியாது.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான ஓ. பன்னீர்செல்வம், சற்று சுறுசுறுப்புடன் செயல்பட விரும்பியதைப் போல இருந்தது. ஏதாவது சம்பவங்கள் நடக்கும்போது அதை நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில்தான், வி.கே. சசிகலா முதலமைச்சராக விரும்பி, ஓ. பன்னீர்செல்வத்தை ராஜிநாமா செய்யும்படி கூறினார். ராஜிநாமா செய்த ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து தர்ம யுத்தத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.

தர்ம யுத்தம்
தர்ம யுத்தம்

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்படவே, முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வானார். அந்தத் தருணத்தில்தான் கட்சியின் பிரமுகர்களில் பலர் வெளிப்படையாக தங்களது ஆதரவை ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளித்தனர். தர்மயுத்தம் துவங்கியபோது, 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தின் பக்கம் நின்றனர். மாஃபா பாண்டியராஜன் போன்ற பல சட்டமன்ற உறுப்பினர்களும் அவர் பக்கம் நின்றனர். ஓ. பன்னீர்செல்வத்தால் அதிகபட்சமாக ஆட்களைத் திரட்ட முடிந்தது இந்தத் தருணத்தில்தான்.

ஒரு கட்டத்தில், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒதுக்கப்பட்டுவிட, மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி கே. பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. இதில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவிட, மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரானார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தை நம்பியிருந்த பலருக்கு பெரிதாக பதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. தவிர, கட்சியின் தலைமைப் பொறுப்பும் முழுமையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலின்போதும்கூட, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவர்களே பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார்கள்.

2021ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை இழந்த பிறகு, தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டிய தருணங்களில் அதனைச் செய்யவில்லை என்ற பேச்சுகள் துவங்கின. அதற்கேற்றார் போல, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்றதும் கட்சித் தொண்டர்கள் கவலையடைந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர்
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்

இந்த நிலையில்தான், கட்சியை தன் வசப்படுத்த, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க முடிவெடுத்தார் எடப்பாடி கே. பழனிசாமி. அதற்கு ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட வெகு சிலரே உடனிருந்தனர். துவக்கத்தில் 15 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தரப்பிடம் இருப்பதாக வைத்திலிங்கம் தெரிவித்தாலும், ஒவ்வொருவராக எடப்பாடி பக்கம் சென்றுவிட, முடிவில் 6-7 மாவட்டச் செயலாளர்களே ஓ.பி.எஸ். பக்கம் நின்றனர். கடந்த முறை, பன்னீர்செல்வம் பக்கம் நின்ற மாஃபா பாண்டியராஜன், கே.பி. முனுசாமி போன்றவர்கள்கூட இந்த முறை எடப்பாடி பக்கம் சாய்ந்துவிட்டனர்.

ஜூன் 23ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக் குழுவிற்குள் அவர் நுழைந்தபோது, பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி கே. பழனிசாமி பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் வாகனம் உள்ளே நுழைந்தபோதே, அவரைத் தூற்றியும் எடப்பாடி கே. பழனிசாமியைப் போற்றியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்தத் தருணத்திலேயே உள்ளே என்ன நடக்கும் என்பதை ஓ. பன்னீர்செல்வம் புரிந்துகொண்டிருக்கக்கூடும்.

கட்சியிலிருந்து பிரிந்து, மீண்டும் சேர்ந்ததிலிருந்தே ஓ. பன்னீர்செல்வத்திற்குப் பின்னடைவு ஆரம்பித்துவிட்டது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா. “1980களில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கட்சியில் இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், ஓருபோதும் தனக்கென ஒரு கோஷ்டியை அவர் உருவாக்கியதில்லை. தலைமை சொல்வதைச் செய்வோம் என்று இருப்பார். அதுதான் அவருடைய பலவீனம்,” என்கிறார் துரை கருணா.

சசிகலா பதவியைப் பறித்த பிறகு, தர்மயுத்தம் துவங்கிய ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான். பா.ஜ.க. தலைமையின் வலியுறுத்தலில் மீண்டும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அதிகாரத்தை அளிப்பதில் எடப்பாடிக்கு விருப்பமிருக்கவில்லை என்கிறார் துரை கருணா.

“கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்தான் என்றாலும் எல்லா முடிவுகளையுமே எடப்பாடிதான் எடுத்தார். அதனை ஓ. பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை. தன்னால், ஒரு முறை கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதால் மீண்டும் அது நிகழாமல் இருக்க விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. ஓ. பன்னீர்செல்வத்தைத் தனிமைப்படுத்த நினைத்த எடப்பாடி பழனிசாமி, பொதுக் குழு உறுப்பினர்களில் துவங்கி, மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர்வரை தன்வசம் இழுத்துவிட்டார். இப்போது 80 சதவீத நிர்வாகிகள் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்கிறார் துரை கருணா.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகரும் இதையே சொல்கிறார். “கட்சி ஒன்றாக இணைந்த பிறகுகூட தன் ஆதரவாளர்களுக்கு என அவர் எந்த சிபாரிசையும் செய்ததில்லை. எந்த விஷயம் கையெழுத்திற்காக வந்தாலும் அண்ணன் பார்த்துவிட்டாரா என்று கேட்டுத்தான் கையெழுத்திடுவார்,” என செய்தியாளர் சந்திப்பிலேயே சொன்னார் பிரபாகர்.

இனி என்ன செய்யப்போகிறார் ஓ. பன்னீர்செல்வம்? அவரது ஒருங்கிணைப்பாளர் பதவி போய்விட்டது என சி.வி. சண்முகம் போன்றவர்கள் சொன்னாலும் அதனை அவ்வளவு சீக்கிரத்தில் விட மாட்டார் ஓ.பி.எஸ். இது தொடர்பாக நீதிமன்றத்தை அவர் நாடக்கூடும்.

ஓ. பன்னீர்செல்வம் கட்சிக்குள் தன் ஆதரவை இழந்தது எப்படி?

கட்சியைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் பா.ஜ.க. என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க விரும்புவார். அதற்குப் பிறகே அவரது எதிர்கால நடவடிக்கைகள் அமையக்கூடும்.

1980களில் இருந்தே அ.தி.மு.கவில் இருந்துவரும் ஓ. பன்னீர்செல்வம் பெரியகுளத்தின் நகர் மன்றத் தலைவராக இருந்தவர். 1998ல் டி.டி.வி. தினகரன் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்போது, அதிலிருந்த பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். அந்தத் தேர்தலில் டி.டி.வி. தினகரன் வென்றுவிட, அந்த வெற்றிக்காகப் பாடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தலைமைக் கழகப் பொறுப்புகளோ, வேறு முக்கியப் பொறுப்புகளோ வழங்கப்பட்டன.

அதற்குப் பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலில் வென்ற ஓ. பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு பிரச்சனை ஏற்பட்டபோதெல்லாம் முதலமைச்சராகும் வாய்ப்பு ஓ. பன்னீர்செல்வத்திற்கு வந்தது. அவரது மறைவுக்குப் பிறகும்கூட, ஓ.பன்னீர்செல்வமே முதல்வரானார்.

ஒரு கூட்டத்தில் பேசும்போது, “நம்பிக்கை, விசுவாசம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்று ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், தனக்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யும்படி சசிகலா சொன்னபோது முரண்டு பிடித்தார். இதற்குப் பிறகு அவர் தொடர்ந்த தர்மயுத்தமும் அதன் விளைவுகளும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குமளவுக்குச் சென்றன.

இந்த முறை ஓ. பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here