ஓலா, உபர் கால் டாக்சியை பயன்படுத்துவது ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு காரணமில்லை : மாருதி சுசூகி

0
257

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 100 நாள்கள் சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டார்.

அப்போது அவர் வாகன விற்பனை சரிவு குறித்து பேசுகையில், வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அவரது இந்த கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், தொடர்புடைய துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனமான மாருதி சுசூகியின் சந்தை மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்சவா, நிதியமைச்சரின் கருத்தை மறுக்கும்வகையில், அதுகுறித்து போதிய ஆய்வுகள் தேவை என கூறியுள்ளார்.

“இன்றைய தலைமுறையினர் ஓலாவும் உபரும் பயன்படுத்துவது ஆட்டோ வாகன துறையின் வீழ்ச்சிக்கு திடமான காரணமாக இருக்க முடியாது. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் இது குறித்து முறையான ஆய்வுகளை செய்ய வேண்டும்” என சசாங்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ஓலாவும் உபரும் பயன்பாட்டுக்கு வந்து 6-7 ஆண்டுகள் ஆகின்றன. வாகனத் துறை இந்தக் காலக்கட்டத்தில் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றிருந்தது. கடந்த சில மாதங்களாகத்தான் மந்தநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? ஓலாவும் உபரும்தான் காரணம் என நான் நினைக்கவில்லை” எனவும் பேசியுள்ளார்.

அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.

இந்தியாவில் வாகனங்களை வாங்குபவர்களில் 46% பேர் முதல்முறை வாங்குபவர்களாகவே உள்ளனர். இது விருப்பத்தின் அடிப்படையிலான நடத்தை. மக்கள் பொது போக்குவரத்தாகத் தான் ஓலா, உபரை பயன்படுத்தி வார நாட்களில் அலுவலகத்துக்குப் போனாலும் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே செல்வார்கள் 

“இந்தியாவில் உரிமை முறை இன்னமும் மாறவில்லை. வாங்கும் முறையில் கட்டமைப்பு மாற்றம் இருக்கிறதா என நீண்ட காலம் கவனிக்க வேண்டும் என்கிற அவர், வாகன துறையின் மந்த நிலைக்கு பல காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

பணப்புழக்க நெருக்கடி, ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தல், அதிக வரி மற்றும் காப்பீட்டு தொகை உயர்வு போன்ற பல காரணங்கள் இருக்கின்றன 

மந்தநிலையை சீராக்க கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை 

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers ) உள்நாட்டு வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 23.55 சதவீதம் வீழ்ந்துள்ளதாக கூறியுள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான விற்பனை 15.89% வீழ்ந்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டைவிட 34.3% குறைந்துள்ளது. வரும் பண்டிகை காலங்களில் நிலைமை ஓரளவுக்கு சீராகும் என்கிற சசாங்க் ஸ்ரீவத்சவா, “அரசுக்கு இப்போதிருக்கும் நிலைமை நன்றாக தெரியும். அவர்கள் முழு பொருளாதாரத்தையும் சீராக்க வேண்டும். இந்தத் துறைக்கும் பொருளாதாரத்துக்கு சிறப்பானதை அவர்கள் செய்வார்கள்” என நம்புவதாகத் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here