ஓர் ஆண்டாக 75லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில்; அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது – ப சிதம்பரம்

0
256

கடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர் மக்கள் சிறையில் இருப்பதைப் போன்று உணர்கிறார்கள், இந்தியாவில் ஜனநாயகம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே, வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரான 370 பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிரத்து செய்யப்பட்டது. அதன்பின் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன்   ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இது குறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று ஆகஸ்ட் 6-ஆம் தேதி. அனைத்து அரசியல் கட்சிகளும், சரியாகக் சிந்திக்க்கூடிய குடிமக்கள் அனைவரும், கடந்த ஓர் ஆண்டாக சிறையில் இருப்பதைப் போன்று வாழ்ந்துவரும் 75 லட்சம் காஷ்மீர் மக்களைப் பற்றி நினைத்துப்பாருங்கள்.

ஜனநாயக ரீதியில் செயல்படும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பரூக் அப்துல்லா, தன்னுடைய கூட்டம் குறித்து முன்பே அறிவித்தும் அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இதுதான் புதிய ஜனநாயகமா, இதைத்தான் பாஜக உருவப்படுத்திப் பார்த்ததா?

அனைத்துத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் இருக்கிறார்கள். நீங்கள் கேள்வி எழுப்பினால், நீதிமன்றத்தில் சென்று யாரும் வீட்டுக்காவலில் இல்லை என்று கூறுவார்கள். இதுதான் உண்மைக்கு பிந்தைய இந்தியா. வீட்டுக் காவல் என்பது சட்டவிரோத கருவி. கிரிமினல் சட்டத்தில் கீழ் அதற்கு எந்த சட்டஅங்கீகாரமும் இல்லை. இது அதிகார துஷ்பிரயோகம்

மெகபூபா முப்தியை விடுவிக்கவும், வீட்டுக்காவலில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக நடமாடவும் நாம் அனைவரும் நமது குரலை ஒன்றாக எழுப்ப வேண்டும்.

இந்தியாவில் அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பெருமையாகக் கூறிக்கொள்ளும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாடு என்பது நாள்தோறும் குறைந்துகொண்டே வருகிறது என்று பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here