ஓர் அலட்சியத்தின் சாட்சியம்

அருள் எழிலனின் “பெருங்கடல் வேட்டத்து” ஆவணப் படம் ஓர் அலட்சியத்தின் சாட்சியமாய் நின்று பேசுகிறது.

0
575

பெருங்கடலில் வேட்டையாடுகிற, வேட்டையாடப்படுகிற மக்கள் சமூகம்தான் தமிழ்நாட்டு மக்கள் இளைப்பாறுகிற இடமாக மெரினா கடற்கரையைக் காப்பாற்றி தந்திருக்கிறது; 1985இல் சென்னையில் நடந்த கடல் பழங்குடிகளின் வீரம் செறிந்த போராட்டத்தால் இந்தக் கடற்கரை மக்களுக்கான பொதுச் சொத்தாக நீடிக்கிறது. இந்தியா முழுவதுமிருக்கிற 7,500 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள கடற்கரையில் 70 கிலோமீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டது கன்னியாகுமரி மாவட்டம்; இந்திய துணைக் கண்டத்திலேயே ஆழ்கடல் அறிவு மிகுந்த கடல் பழங்குடிகளைக் கொண்ட மாவட்டமும் இதுதான். 2017ஆம் ஆண்டு நவம்பர் 29-30இல் தாக்கிய ஒக்கி புயலுக்குப் பெரும் விலை கொடுத்ததும் இந்த மாவட்டத்தின் 180க்கும் அதிகமான மீனவச் சொந்தங்கள்தான். ஏறத்தாழ 100 குடும்பங்களில் ஆண்களே இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறது இந்தப் பேரிடர்.

ஆழ்கடல் அறிவில்லாத கடலோரக் காவல் படையையும் கப்பல் படையையும் வைத்திருக்கும் இந்திய அரசால் ஐந்து நாட்களாக கடலில் தத்தளித்த 180க்கும் மேலான மக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குனருமான அருள் எழிலன் இயக்கியுள்ள ”பெருங்கடல் வேட்டத்து” என்கிற ஆவணப் படம் சொல்லுகிற சேதி. ஆழ்கடல் அறிவு மிக்க கடல் பழங்குடிகளைத் தமிழ்நாட்டின் மீன்வளத் துறையிலும் மத்திய அரசின் கடலோரக் காவல் படையிலும் கப்பல் படையிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்; அப்போதுதான் 1500 கடல் மைலுக்குச் சென்று பெருங்கடலை இந்த நாடு ஆள முடியும். அல்லது உலக வல்லரசுகளின் துணைப் படைகளாக நமது கடல் படை சுருங்கிப் போகும். இந்தச் செய்தியை ஒக்கி புயல் ஓங்கி அறைந்து சொல்லிச் சென்றுள்ளது.

மக்களின் வாக்குக்கு மதிப்பளிக்காமல் 97 பேரை மட்டுமே காணவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு என்பதை இந்தப் படம் கடலோரக் கிராமத்து மக்களின் வாய்மொழிகளாக பதிவு செய்கிறது. மக்களின் சொற்களுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசைப் பணிய வைப்பதற்காக குழித்துறை ரயில் நிலையத்தை 13 மணி நேரம் மறித்த மக்களின் கோபத்தைப் படிப்படியாக படமாக்கியிருக்கிறார் எழிலன். பெண்களின் கண்களைக் கொண்டு இந்தப் பேரிடரைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தினின் அறைகூவலுக்கு முற்றுமுழுதாக செவிகளைத் தாழ்த்தியிருக்கிறார் இந்த ஆவணப்பட இயக்குனர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் இப்படிச் சொன்னார், “இதை நான் எடுத்திருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது; நெய்தல் திணையைச் சேர்ந்த எழிலன் எடுத்ததால்தான் இவ்வளவு உண்மையாக இந்தப் படம் இருக்கிறது”.

பெருந்துயரில் இருந்த பெண்களின் கண்ணீரை வடித்தெடுத்திருக்கிறது இந்தப் படம்; பெருந்துயர் நிகழும்போது சிலர் வாயடைத்துப் போகிறார்கள். சிலர் பெருங்குரலெடுத்து அழுகிறார்கள். சொந்த மக்களைக் காப்பாற்ற முடியாத இந்தத் தேசத்தின் இயலாமையை, அலட்சியத்தைச் சொல்லிக் காட்டுகிறார்கள். பேரிடரின்போது கைவிட்ட அன்னையை நோக்கி தேவாலயத்தில் அழுது புலம்புகிறார்கள். கருங்கல்லில் தேவாலயத்தில் ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் சங்கீதம் ஆனந்தமாய் மேலெழும் அதே வேளையில் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் சின்னத்துறை தேவாலயத்தில் பெரும் ஓலங்கள் நிறைந்த கிறிஸ்துமஸ் கண் முன்னால் விரிகிறது.

கடலோரங்களை வெறும் ரியல் எஸ்டேட்டாகவும் கடலோரச் சமூகங்களை வெறும் தடைக்கற்களாகவும் பார்க்கிற நிலம் சார்ந்த அரசியல் பார்வையில் உடைப்புகளை உண்டாக்குவதில் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. கடல் பழங்குடிகளின் அரசியல் கற்பனையைக் கட்டிப் போட்டிருக்கும் தேவாலயங்களை நோக்கி சில கேள்விகளைக் கேட்டு புதிய திறப்புகளை உருவாக்கியிருக்கிறது படம். வானுயரக் காட்சிகளில் தொடங்கும் கதை சொல்லல் வானுயரக் காட்சிகளில் முடிவது நெய்தல் சமூகத்தின் கற்பனைகள் மேலெழுவதையும் அது எப்போதும் போல் எல்லைகளற்று விரிவதையும் அடையாளப்படுத்துகிறது. இது அரசியல் எழுச்சியாக வடிவம் பெறுவது சம காலத்தில் நிகழும் என்ற நம்பிக்கையைப் படம் விதைக்கிறது. ஜாதியால் கட்டுண்டுள்ள மனச்சுவர்களை உடைப்பதற்கு இதுபோன்ற உரையாடல்கள் பல்கிப்பெருக வேண்டும்.

வளர்ச்சியால் விளைந்த போராட்டம் இது

வெள்ளை முடிக்கும் கறுப்பு வேர்கள்