துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம், தனக்கென தனி அணியை உருவாக்கிக் கொண்டார். அவருக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக ஆளுநர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 11 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கெதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு இன்று (ஏப்.27) தீர்ப்பளித்தது. அதில், சபாநாயகருக்கு நீதிமன்றம் உததரவு முடியுமா என்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் மூலம், ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரின் பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியது.

முன்னதாக, இந்த வழக்கில் இன்று (ஏப்.27) வழங்கக் கூடாது என பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும், மனுதாரர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதால், நீதிமன்றத்திலிருந்து அவரை வெளியேற்ற சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையும் படியுங்கள்: படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்களுக்கு சம்பளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here