கதை, திரைகதை, வசனம், டைரக்‌ஷன் என எல்லாமே டெல்லியில் நடக்கிறது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மீது நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”திமுக மட்டுமல்ல எல்லா அரசியல் கட்சிகளும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும் கூட அவர் எப்போது மரணமடைந்தாரோ அன்று முதலே அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி வந்தனர். குறிப்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய உண்மையான கோரிக்கை. அதைத்தான் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதே ஓபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று 40 நிமிடங்கள் தியானம் செய்துவிட்டு, அவரது ஆவியோடு பேசியதாகவும் சொல்லி, உடனடியாக இதுகுறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்றார். அதையும் தாண்டி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார். அப்படி சொன்னவர் இப்போது, தமிழக அளவிலான விசாரணைக்கு ஒப்புகொண்டு இருப்பதால், ஒருவேளை விசாரணை கமிஷன் எல்லாம் வேண்டாம் கமிஷன் கொடுத்தால் போதும் என்பதற்காக இப்போது ஒப்புகொண்டு இருப்பாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.” என்றார்.

மேலும் அவர், “கதை, திரைகதை, வசனம், டைரக்‌ஷன் என எல்லாமே டெல்லியில் நடக்கிறது. அதற்கேற்றார் போல ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரும் இங்கு வேஷமிட்டு சிறப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.” என்றும் குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றப்படும் அறிவித்துள்ளது குறித்து பேசிய அவர், ”அதனை சட்டப்படி செய்ய வேண்டும். இப்போது நடைபெறவது சட்டரீதியாக தவறானது. எனவே, இதில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.” என்றார்.

இதையும் படியுங்கள்: ”நீதிபதிக்கே பாதுகாப்பில்லாத இலங்கைக்கு எப்படித் திரும்புவோம்?”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்