(பிப்ரவரி 17, 2019இல் வெளியான தலையங்கம்)

கன்னியாகுமரியின் அரபிக் கடலோரத்திலிருந்தோ, ஹவாயின் பசிபிக் கடலோரத்திலிருந்தோ ஓடத்தில் 4000 கிலோமீட்டர் பயணிக்கிற ஆதிகுடிகளுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது; பெருங்கடல் பாதையில் அவர்கள் நிகழ்த்துகிற மீன் வேட்டைக்கான நெடும்பயணம் நாற்பத்தைந்து நாட்களை எடுத்துக்கொள்வதாக இருக்கலாம். இளைப்பாறுவதற்காக வழியில் தீவு ஒன்று தென்படும்போது, அந்தத் தீவையும் அவர்கள் ஓடமாகத்தான் பாவிக்கிறார்கள். ஓடத்தைச் செலுத்துவதற்கு காற்றோடும் கடலோடும் இயைந்து போவதைப் போலவே அந்தத் தீவும் தண்ணீரில் மூழ்கி விடாதபடி மிகவும் கவனமாக அதன் மணலில் மிருதுவாக பாதம் பதிக்கிறார்கள். அங்கிருந்து எதையும் சூறையாடுவதில்லை. பேராசையுடன் நடந்து கொள்வதில்லை. அங்குள்ள பாறைகளையும் மரங்களையும் செடி, கொடிகளையும் மற்ற எந்தச் சக உயிர்களைப்போலவே கண்ணியத்துடன் அணுகுகிறார்கள். மருந்துக்காக இலைகளைப் பறிப்பவர்கள் மரம் பட்டுப் போகுமளவுக்கு இலைகளைச் சூறையாடுவதில்லை என்கிறது ஒரு நற்றிணைப் பாடல். நண்டுகளைப் பிடிப்பவர்கள் சினை நண்டுகளைப் பிடிப்பதில்லை என்கிறார் சமகால கடல் வாழ்வு ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின். இந்த மதிப்பீடுகளினூடக பூமியை ஒரு தீவாக, ஓர் ஓடமாக அணுக வேண்டிய காலம் இது.

”ஓடம்தான் தீவு; தீவுதான் ஓடம்” என்கிற ஆதிகுடிகளின் புரிதலிலிருந்தும் அறிவியல் எழுத்தாளர் ஆர்தர் சி.கிளார்க் சொன்ன “இது பூமி எனும் கோளல்ல; இது பெருங்கடல் எனும் கோள்” என்கிற விளக்கத்திலிருந்தும் பிரபஞ்சத்தைப் பார்க்கலாம். கடற்கரைகளிலிருந்து நதிக்கரைகளுக்கு மானுட நாகரிகம் நகர்ந்தது என்கிற புதிய வாசிப்பைப் பழகலாம். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியிலுள்ள உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகமான ஸ்மித்சோனியனின் புவியியலாளர் டக்ளஸ் ஹெர்மனை அண்மையில் சந்தித்தேன். பூமியை ஓடமாக பார்த்து நாம் எல்லோரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டிய தருணம் இது என்று கரிசனத்தோடு பேசினார். “பூமியை இப்போதாவது ஓடமாக பார்த்து பழகாவிட்டால் எல்லோரும் சேர்ந்து மூழ்கி அழிந்து போவோம்” என்றார் டக்ளஸ். ஆதிகுடிகளின் அறிவிலிருந்தும் பொறுப்புணர்ச்சியிலிருந்தும் புதிய உலகின் சுதந்திரத்தை மீளக்கட்டுவதற்கான அவசியத்தைப் பேசினார். நவீனத்தின் தனிநபர் சுதந்திரம், பொது நன்மைக்கான பொறுப்புணர்ச்சியிலிருந்து நம்மை அன்னியப்படுத்திவிட வேண்டாம் என்று சேதி சொல்லிவிட்டுக் கடந்து போனார் அவர்.

இதைத்தான் கன்னியாகுமரியில் “நீ ஊருக்கு நல்லது செய்தால், ஊர் உனக்கு நல்லது செய்யும்” என்று சொல்வார்கள். ஹவாயில் இதனை “நீ இந்த நிலத்தைக் கவனித்துக் கொண்டால், நிலம் உன்னைக் கவனித்துக் கொள்ளும்” என்பார்கள். ஹவாயில் அலோஹா என்று அன்பைப் பொழிவார்கள். கன்னியாகுமரியில் வணக்கம் சொல்லி வரவேற்பார்கள்.

EXCLUSIVE: THE RAYA SARKAR INTERVIEW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here