மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும்? என்பன தொடர்பான விவரங்கள் எதுவும் தங்களது வசம் இல்லை என்று என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு தீவிரமான முயற்சி எடுத்து வரும் நிலையில், அதுதொடர்பான அடிப்படை விவரங்கள் கூட தேர்தல் ஆணையத்திடம் இல்லாதது புதிய சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையமும், தனது வரைவு அறிக்கையை அரசிடம் அளித்திருந்தது. ஆனால், அதற்கு பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கவில்லை.
அதிமுக, சமாஜவாடி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஒருங்கிணைந்து தேர்தல் நடத்துவதற்கு எத்தனை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், வாக்கு ஒப்புகை எந்திரங்களும் தேவைப்படும் எனக் கேட்டு விஹார் துருவே என்ற சமூக ஆர்வலர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதுதொடர்பான விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

20 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தற்போது உள்ளதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கூடுதலாக 10 லட்சம் எந்திரங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவர் அப்போது தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

Courtesy :NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here