ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்; ஏற்கனவே 12 மாநிலங்களில் அமல்

0
324

ரேஷன் அட்டை என்று அழைக்கப்படும் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை முடிக்க டிசம்பர் 31ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டைகளை இணைக்கும் பணி நிறைவடைந்ததும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த, மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளார். 

அதன்படி, பொது விநியோகத் திட்டத்தை எளிதாக்க,  ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்’ என்று மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில், இந்த திட்டம் ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொது வழங்கல் துறையின் கீழ் பயன்பெறும் அனைவரின் விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே விலையில்லாமல் அரிசி கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் வேறு மாநிலத்துக்காரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டுமெனில், அந்த மாநிலத்து விதிமுறையின் படிதான் வாங்க முடியும்.

புதிதாக, வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்குபவரின் ரேஷன் அட்டைகள், ஆன்லைனில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அதற்கான அரிசியைப் பெற்றுக் கொடுப்போம் என்று மத்திய அரசு உறுதி அளிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களுக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், சிறப்பு விநியோகத் திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. 

இந்நிலையில் நமது மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் மக்கள், ரேஷன் கடையில் பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதே சமயம் மற்ற மாநிலத்தவர், இங்கு எதையும் இலவசமாக வாங்கிவிட முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவை ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here