ஒரே காரில் கோர்ட்டுக்கு வரும் நான்கு நீதிபதிகள்

0
1236

ஒரு வீட்டில் மொத்தமாக நான்கு பேர் இருந்தாலே நான்கு பேரும் தனித்தனியாக பைக் வாங்கிப்பாங்க. கொஞ்சம் காசு பார்க்க ஆரம்பிச்சுட்டா கார் வாங்கி அதுல பயணம் செய்வாங்க. ”கார் இப்ப அத்தியாவசிய பொருளாயிடுச்சு” என்பதுதான் அவர்களது வாதம். ஆனால், இவர்களுக்கெல்லாம் மத்தியில் சென்னை உயர்நீதி மன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஒரே காரில் கோர்ட்டுக்கு வர்றாங்க. எவ்ளோ ஆச்சரியம். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் உண்மையிலேயே தங்களின் இந்த செயலுக்காக நிச்சயம் பாராட்டப்படக் கூடியவர்கள்.

சென்னையில் வாரநாட்களின் காலையில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதுவும் கோர்ட்டுக்குள் காலையில் எத்தனை கார்கள் வரிசைக்கட்டி நிற்கும். போய் பார்த்தால்தான் தெரியும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என அனைவருடைய கார்களும் நிற்பதற்கு இடமில்லாமல் தவிக்கும். ஒருவர் வந்து தன் காரை எடுக்கும்போது, “அப்பாடா, நமக்கு இடம் கிடைச்சாச்சு”ன்னு தோணும். அப்புறம் பெட்ரோல், டீசல் விலை. எப்ப ஏறும், எப்ப இறங்கும்னு தெரியலை. அரசாங்கம் செய்துக் கொடுத்துள்ள இந்தப் போக்குவரத்து வசதிக்கே சிக்கனம் பார்க்கும் இந்த நான்கு நீதிபதிகளுக்கும் சபாஷ் போடலாம்.

எப்படீங்க இது சாத்தியம்?

நீதிபதிகள் பதிவுத்துறை இலவசமாக வழங்கியிருக்கும் சொகுசு கார்களை பயன்படுத்தாமல் 4 நீதிபதிகள் ஒரே காரில் தினமும் கோர்ட்டுக்கு வர்றது ஆச்சரியமா இருக்கா? ஆனால், இதை மிகவும் எளிதில் செய்துக் காட்டிருக்காங்க இந்த நீதிபதிகள். அதாவது வாரத்திற்கு ஒருவருடைய காரை பயன்படுத்துகிறார்கள். யாருடைய காரை பயன்படுத்துகிறார்களோ அவரே சென்று மற்ற மூன்று நீதிபதிகளையும் அழைத்துக்கொண்டு காலையில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல், மாலையிலும் வீட்டிற்கும் கொண்டுவந்து விட வேண்டும். சிம்பிள்.

அரசுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்”

“கார் பூலிங் (ஒரே காரை பகிர்ந்து உபயோகித்தல்), இதபத்தி பேசிட்டே இருக்கோம். ஆனால், யாரும் நடைமுறைப்படுத்தல. அத இந்த 4 நீதிபதிகள் செய்தது ரொம்ப நல்ல விஷயம். உயர்நீதிமன்ற நீதிபதிகளே இதை செய்யும்போது மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாதுன்னு மத்தவங்களும் யோசிக்கணும். இதனால், எரிபொருள் வீணாகாது. நெரிசலை தவிர்க்கலாம். அரசு பேருந்துகளை மக்கள் உபயோகிப்பதும் நல்லதுதான். ஆனால், அது மக்களுக்கு ஏற்றாற்போல் இல்லை. வயதானவர்கள் படியில் ஏறவே முடியவில்லை. பல இடங்களில் பேருந்து நிலையங்களே இல்லை. சிறிய, நெருக்கடியான சாலைகளில் சிறிய ரக பேருந்துகளை கொண்டு வர வேண்டும். அரசு போக்குவரத்தில் கண்டிப்பாக பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.”, என மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறினார்.

ஒரே வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக ஒரே காரில் பயணித்தால் எவ்வளவு நல்லது நடக்கும். பக்கத்து வீட்டுக்காரர்கள் போகும் இடத்திற்கு நீங்களும் செல்கிறீர்களா? ஒன்றாக ஒரே காரில் செல்லுங்கள். எரிபொருளும் மிச்சமாகும். போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம். பார்க்கிங்கு இடத்தைத் தேட வேண்டிய அவசியமும் இருக்காது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்