அருணாச்சலப்பிரதேசத்தில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், சீன எல்லையில் உள்ள ஒரே ஒரு பெண்ணுக்காக ஒரு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.

அருணாச்சல் – சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் சில குடும்பங்களே வசிக்கின்றன. அங்குள்ள வாக்காளர்கள் அனைவரும் வேறு பொதுவான வாக்குச்சாவடியில் தங்களது பெயரை பதிவு செய்துவிட்டனர். ஆனால் ஜனில், தயாங் என்ற தம்பதி மட்டும் பதிவு செய்யவில்லை. வேறு வழியில்லாமல் இவர்கள் இருவருக்கு மட்டும் 2014ஆம் ஆண்டு தேர்தலில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கணவர் ஜனிலும் தன்னுடைய பெயரை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிவிட்டார். ஆனால் தயாங் மாற்றவில்லை. அதனால் தயாங் ஒருவருக்காக வாக்குச்சாவடி அமைக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அந்த கிராமத்துக்கு சரியான பாதை வசதி இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் சுமந்தே அங்கு சென்றுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் அதிகாரி, ”தயாங் என்ற ஒரு பெண்ணின் ஓட்டுக்காக நாங்கள் வாக்குச்சாவடி அமைத்துள்ளோம். அவர் எப்போது வந்து ஓட்டுப்போடுவார் என கூற முடியாது. நாங்கள் வற்புறுத்தவும் உரிமை இல்லை. நாங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அவருக்காக காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here