இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 7 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா வியாபாரம் நெருக்கடியில் உள்ளதை இந்த 7 படங்களின் வெளியீடு உணர்த்துகிறது.

பெரிய படங்களை ஒரேநேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடும் முறை வந்த பிறகு சின்னப்படங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. சமீபத்தில் முன்னணி நடிகரது படம் சுமார் 750 திரையரங்குகளில் வெளியானது. இதனால், அதனுடன் வெளியான பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை படங்களுக்கு குறைந்தபட்ச எண்ணிக்கையில்கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. அதேபோல் உத்தரவு மகாராஜா படமும் திரையரங்குகள் கிடைக்காமல் பெரும் தோல்வியை சந்தித்தது. உத்தரவு மகாராஜா, பில்லா பாண்டி படங்களின் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் சின்னப் படங்களை பாதுகாக்க தவறிவிட்டது எனக்கூறி தங்களது தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மொழி, திமிரு பிடிச்சவன் உள்பட மூன்று படங்கள் தமிழகத்தின் எண்பது சதவீத திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் செய், கரிமுகன், கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும், பட்டினப்பாக்கம், சகவாசம், வண்டி, செம்மறி ஆடு ஆகிய 7 படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இந்த 7 இல் ஒரு படத்திற்குக்கூட அவர்கள் கேட்ட எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. சில படங்களுக்கு சென்னையிலேயே காட்சிகள் இல்லை. பிறகு எப்படி இந்தப் படங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கும்?

அடுத்தவாரம் 2.0 வெளியாகும் போது இந்தப் படங்களின் மிச்சசொச்சங்களும் துடைத்து எறியப்படும். அதனைத் தெரிந்து கொண்டேதான் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படம் வசூலிப்பதல்ல, படத்தை ஒன்றிரண்டு திரையரங்களில் ஒரு காட்சியாவது வெளியிட்டாக வேண்டும் என்பதே சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சவாலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here