ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவருமா உலக முதலீட்டாளர்கள் மாநாடு?

0
766

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வருகின்ற செப்டம்பர் 9,10 தேதிகளில் மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதிலிருந்து 3000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் இதன் மூலம் தமிழகம் பெறும் என்று எதிர்பார்க்கிறது அரசு.

குஜராத்தை மாதிரியாகக் கொண்டு…

இந்திய மாநிலங்களில் அதிக உலக முதலீடுகளைப் பெற்ற குஜராத்தை மாதிரியாகக் கொண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டைக் கூட்டுகிறது தமிழக அரசு. கடந்த 2013-ஆம் ஆண்டில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் 10-15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றதாக கூறியது குஜராத். அடுத்து ஜனவரி 2015-ஆம் ஆண்டில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றது. இந்த அளவு முதலீடு குஜராத்துக்கு வரக்காரணம் முதலீட்டுக்கான எளிமையான சட்டதிட்டங்கள், போக்குவரத்து வசதிகள் குறிப்பாக, ஏற்றுமதி-இறக்குமதிக்கு உகந்த துறைமுகங்கள் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். குஜராத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் வசதி, வாய்ப்புகள் உலக முதலீட்டாளர்களை ஈர்க்குமா என்பதைப் பொறுத்தும் முதலீடுகள் அமையலாம்.

தொழில் நிறுவனங்களின் தலைநகர் தமிழ்நாடு

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படுவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களைவிட 28 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை தருவதில் தமிழகம் முன்னிலை வகிக்கின்றது. பொதுவாக, அன்னிய நேரடி முதலீட்டில் புதிய வணிக வாய்ப்புகளுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், வெளிநாட்டில் கிடைத்த இலாபங்களை முதலீடு செய்தல், நிறுவனங்களுக்கிடையேயான கடன் வழங்குதல் ஆகியன இதில் அடங்கும். 2000ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகம் மூன்றாவது இருந்தது. அதனால்தான் தொழில் நிறுவனங்களின் தலைநகரமான சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களை பெருமளவில் இம்மாநாட்டில் கலந்துகொள்ள செய்யவும் கிருஷ்ணகிரி, நாமக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதல்வரின் கனவுத்திட்டமா?

எழும்பூரில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான வங்கியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன், தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடல் நிகழ்வை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் பேசிய சிட்கோ நிறுவனத்தின் தலைவர் J.C.D பிரபாகர், ‘‘முதல்வரின் 2023 தொலைநோக்குத் திட்டத்திற்கு கிடைக்கப் போகின்ற முதல் வெற்றியாய் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு அமையும். இந்நிகழ்வை சிறப்பாக நடத்திட வங்கிகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். அப்போதுதான் ஏராளமான இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள்” என்றார்.

முதலீட்டாளர்களின் கவனம் பெற இருக்கும் முக்கிய துறைகள்

* வான்வெளி மற்றும் பொறியியல்
* வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல்
* தானியங்கி மற்றும் வாகன உதிரிபாகங்கள்
* மின்னணு வன்பொருள்
* உள்கட்டமைப்பு
* தகவல் தொழில்நுட்பம்
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
* ஜவுளி மற்றும் ஆடை

வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்குமா முதலீட்டாளர்கள் மாநாடு?

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில்தான் இதுபோன்ற முதலீட்டாளர்கள் மாநாடு, புதிய நிறுவனங்களின் உருவாக்கத்தையும் அதன்மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று நம்புகிறது அரசு. ஆனால் அதேநேரத்தில் 2005-ல் அ.தி.மு.க ஆட்சியில் நோக்கியா தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானதையும் அதன் பிறகு மூடப்பட்டதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் கைவிடாத அளவிற்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்