ஒரு பெண், ஒரு சாது என்று நினைக்காமல் ஜாமீனில் வந்தவர் வேட்பாளரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் – சாத்விக்கு ஆதரவாக பேசும் இந்திய பிரதமர் மோடி

0
199

இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்றவர்களுக்கான பதிலடியாக சாத்வி பிரயாக்கை போபால் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் எனக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்திருக்கும் சாத்வி பிரயாக் சிங் தாக்கூர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், Times Now  தொலைக்காட்சிக்குப் அளித்த பேட்டியில்  பிரதமர் மோடி  விளக்கமளித்திருக்கிறார். சாத்வியை வேட்பாளராக்கியது நியாயமானதே என்று அவர் பேசியிருக்கிறார். 

அந்தப் பேட்டியில் பிரதமர் மோடி, ” இந்து கலாச்சாரத்தை தீவிரவாதம் என்று கூறியவர்களுக்கான  பதில்தான் போபால் வேட்பாளர் சாத்வி பிரயாக். அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரேபரேலியில் போட்டியிடும் சோனியா காந்தி ஆகியோரும் ஜாமீனில் வெளிவந்தவர்களே. அவர்களைப் பார்த்துமட்டும் ஏன் எவருமே ஜாமீனில்  வந்தவர்களுக்கு போட்டியிட அனுமதியா என்று கேட்கவில்லை ?

ஆனால், ஒரு பெண், ஒரு சாது என்று பாராமல்கூட சாத்வி பிரயாக்கை மட்டும் ஜாமீனில் வந்தவர் வேட்பாளரா? என்று எள்ளி நகையாடுகின்றனர்.

சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, நீதிபதி பி.எச்.லோயா மரணம் ஆகியனவற்றுக்கு எதிராக காங்கிரஸ் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது. சம்ஜூத்தா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததே? அது எப்படி இருந்தது?

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் 5000 ஆண்டுகள் பழமை கொண்ட  இந்து கலாச்சாரத்தை, உலகமே முழங்கிய கலாச்சாரத்தை தீவிரவாத கலாச்சாரம் என்று எளிமையாக சொன்னீர்கள். அப்படிப் பேசியவர்களுக்கு சாத்வியை வேட்பாளராக நிறுத்தி பதில் சொல்லியிருக்கிறோம். இந்த பதிலுக்கு காங்கிரஸ் நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

நான் குஜராத்தில் வாழ்ந்திருக்கிறேன். அங்கு காங்கிரஸ் அரசியல் செய்யும் விதத்தையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் சினிமாவுக்கு கதை எழுதுவது போல் அரசியல் செய்வார்கள். ஏதாவது ஒரு சர்ச்சையை தேர்வு செய்து கொள்வார்கள். பின்னர் அதற்கு ஒரு கதாநாயகனையும் வில்லனையும் அவர்களே உருவாக்குவார்கள்.

அவர்களின் இந்த சினிமா கதை பாணியால்தான் குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டர்  எல்லாமே போலியானவை என்று சித்தரிக்கப்பட்டது. நீதிபதி லோயா இயற்கை எய்தினார். ஆனால் காங்கிரஸின் கதை சொல்லும் திறனால் அது கொலையென புனையப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும் இப்படித்தான் போலி செய்திகள் வெளியிட்டனர்.

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது மகன் ராஜீவ் காந்தி, ஒரு பெரிய மரம் சாயும் போது பூமியில் அதிர்வுகள் ஏற்படும் என்றார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் டெல்லியில் படுகொலை செய்யப்பட்டது. அது மக்கள் மீதான பயங்கரவாதம் இல்லையா?

ராஜீவ்காந்தி பிரதமரான பின்னர் நடுநிலையானவர்கள் என சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் எல்லாம் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், இன்று போபால் வேட்பாளராக சாத்வி அறிவிக்கப்பட்ட பின்னர் எல்லோருமே கேள்வி கேட்கின்றனர்.

சீக்கிய கலவரத்தின் சாட்சியாக இருந்தவர்கள் எல்லோரும் பின்னாளில் அமைச்சர்களானார்கள். அதில் ஒருவர்தான் இப்போது மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருக்கிறார். மத்திய பிரதேச  முதல்வர் கமல்நாத் மீது கூட புகார்கள் இருக்கின்றன. அதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா? எங்களை மட்டும் கேள்வி கேட்க காங்கிரஸுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?” எனப் பேசியுள்ளார்.

ஹேமந்த் கர்கரே என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலின் போது அவர் இறந்தார் என்று சாத்வி பிரயாக் பேசிய பிறகு பிரதமர் மோடி இவ்வாறு பேட்டியளித்திருக்கிறார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here