“இலக்கியம் என்பதெல்லாம் செந்தமிழில் எழுதப்பட வேண்டிய விஷயம் என்று நான் நினைத்திருந்தேன். தோப்பில் முகமது மீரான் எழுதிய ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யைப் படித்தேன். அதில் அவர் லாரன்ஸ் தோப்பு மக்களின் மொழியை அப்படியே பயன்படுத்தியிருந்தார். அப்போதுதான் நான் பேசும் மக்கள் மொழியிலேயே இலக்கியம் படைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது,” என்று பேசினார் நெய்தல் நில எழுத்தாளர் குறும்பனை சி.பெர்லின். வழக்குரைஞர் லிங்கனின் முன்முயற்சியில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் முதல் “நெய்தல் இலக்கியத் திருவிழா” சென்னையிலுள்ள பெரியார் திடலில் டிசம்பர் 14, 2019 அன்று முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. இந்த விழாவில் நெய்தல் இலக்கியத்திற்குச் செய்த பெரும் பங்களிப்புக்காக குறும்பனை சி.பெர்லின் பாராட்டப்பட்டார். பெர்லினின் சிறுகதை ஒன்றின் தலைப்பு “நாங்க இருக்கோம்” என்பதாகும். கடலோர மக்களின் இருப்பே உதாசீனம் செய்யப்படும்போது இந்தத் தலைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தகழி சிவசங்கரபிள்ளையின் “செம்மீன்” மீனவ மக்களைக் கொச்சைப்படுத்தியது. பொன்னீலனின் “மறுபக்கம்” மீனவ மக்களை இழிவுபடுத்தியது. மீனவரான தேவனார் இதனைப் பதிவு செய்துள்ளார். மீனவ மக்களே தங்களைப் பற்றி எழுதியபோதுதான் இந்த இழிவுபடுத்தல்களுக்கு முடிவு ஏற்பட்டது என்று வழக்குரைஞர் லிங்கன் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டார். அம்முவனார், உலோச்சனார், நலந்துவனார், வீரை வெளியனார் ஆகியோர் சங்க காலத்தில் நெய்தல் இலக்கியம் படைத்தார்கள் என்பதைப் பற்றி கவிஞர் பா.வீரமணி பேசினார். திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி குறும்பனை பெர்லினுக்குப் பாராட்டுப் பரிசு வழங்கினார். “நெய்தல் திணை எழுத்தாளர்களே 120க்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார்கள். இவை சமவெளி மக்களின் உரையாடல்களில் போதிய கவனம் பெறவில்லை. எனவேதான் இந்த நெய்தல் இலக்கியத் திருவிழா,” என்று விளக்கமளித்தார் லிங்கன்.

நெய்தல் எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தினின் படைப்புகளைப் பற்றி எழுத்தாளர் பகத்சிங் பேசினார். நெய்தல் திணை மக்களோடு இருபதாண்டுகளுக்கும் மேலாக உரையாடி அந்த வாழ்வை அசலாகப் பதிவு செய்யும் வறீதையாவின் நேர்மையைச் சிலாகித்தார் பகத்சிங். இதுவரை தமிழில் வெளியான நெய்தல் படைப்புகளில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதி வறீதையா கான்ஸ்தந்தினுடையது என்பதையும் பகத்சிங் சுட்டிக்காட்டினார். 2017ஆம் வருடத்தில் நிகழ்ந்த ஒக்கி புயலும் அதையொட்டிய உயிரிழப்புகளும் தன்னை எழுத்தாளராக உருவாக்கின என்று நெய்தல் எழுத்தாளர் சப்திகா கூறினார். நெய்தல் எழுத்தாளர் சாந்தகுமாரியின் “பாட்டியின் வெத்தலப் பெட்டி” என்ற குறுநாவல் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.

கடிகை அருள்ராஜ் எழுதிய “கடல்நீர் நடுவே” நாவல் இந்த விழாவில் முக்கிய கவனம் பெற்றது. கடலில் மீன் பிடிக்கும் தொழிலுக்குச் சென்றுகொண்டே எழுதுவதால் கடிகை அருள்ராஜின் எழுத்தில் யதார்த்தமும் வலிமையான உயிரோட்டமும் இயல்பாக இருந்தன. மீனவர்களின் மரபில் வானியல் அறிவும் காற்றின் திசைகளைப் பற்றிய அறிவும் ஒன்று கலந்திருப்பதை இந்த நாவல் வெளிக்கொணர்ந்துள்ளது. கன்னியாகுமரி மீனவர்களிடம் பாரம்பரியப் பழங்குடிகளுக்குரிய தன்மைகள் இரண்டறக் கலந்திருப்பதையும் இந்தப் புதினம் ஆவணப்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் அருள் எழிலன் எழுதி இயக்கிய “பெருங்கடல் வேட்டத்து” ஆவணப்படம் திரையிடப்பட்டது. 2017இல் ஒக்கி புயலில் 200க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிரிழப்புகளுக்கு அரசுகளின் செவிகொடாமை எப்படிக் காரணமாகியது என்பதைப் படிப்படியான ஆதாரங்களுடன் நிறுவுகிற ஒரு மணி நேர ஆவணப்படம் இது. இந்தப் படத்தைப் பற்றி சமூகச் செயல்பாட்டாளர் கவிதா கஜேந்திரனும் ஊடகவியலாளர் ராஜசங்கீதனும் பேசினார்கள். லிங்கனின் “புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள்” நூலைப் பற்றி நக்கீரன் இதழின் ஆசிரியர் கோவி.லெனின் உரையாடினார். தமிழ்நாட்டு மக்கள் இளைப்பாறுவதற்காக மெரினா கடற்கரையைப் பாதுகாத்துத் தந்தது 1985இல் மீனவச் சொந்தங்கள் நடத்திய தீரம் மிகுந்த போராட்டம். கன்னியாகுமரியின் இயற்கை எழிலையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்தது 2018இல் மீனவச் சொந்தங்கள் நடத்திய இனயம் சரக்குப் பெட்டகத் துறைமுக எதிர்ப்புப் போராட்டம். எழுதுவது, பேசுவதோடு நின்றுவிடாமல் இந்தப் போராட்டத்திலும் முன்னணி வீரராக களம் கண்டார் குறும்பனை பெர்லின். இந்திய மக்களுக்குப் புரதச் சத்தை வழங்குகிற மீனவச் சொந்தங்கள், சம்பளம் வாங்காத கடல் ராணுவமாகவும் பேரிடர் காலங்களில் மக்கள் மீட்புப் படையாகவும் திகழ்கிறார்கள். இந்தச் சொந்தங்களின் வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் வருடம்தோறும் இனி நடக்கும் “நெய்தல் இலக்கியத் திருவிழா.”

The Raya Sarkar Interview

“Nudge” for Media Freedom

சாதனைத் தமிழச்சி சாதனா

நாதமும் தாளமும் நீயானாய் இறைவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here