இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்திய அணி ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2 வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா ராஞ்சியில் நடந்த 3 வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4வது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று(புதன்கிழமை)பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவென்பதால், இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது.

இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இரு அணிகளும் இன்று 136வது போட்டியில் மோதுகின்றன. இதுவரை நடந்த 135 போட்டிகளில் இந்தியா 49 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 76 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 10 போட்டிகள் முடிவு இல்லை.

அணிகள் விபரம் :

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், விஜய் சங்கர்,குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, யுஜவேந்திர சஹல், புவனேஸ்வர் குமார்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஷ்டன் டர்னர், ஹை ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸம்பா, ஆன்ட்ரு டை, பேட் கம்மின்ஸ், நாதன் நைல், அலெக்ஸ் கரே, நாதன் லயன், ஜேஸன் பெஹ்ரென்டர்ப்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல், பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை நேரடி ஒளிபரப்புச் செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here