இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று(புதன்கிழமை)பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக கவாஜா, 102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இது. அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹேண்ஸ்ட்காம்ப் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

தவான் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 20 ரன்னில் அவுட்டானார். வழக்கம் போல் ரிஷப் பந்த் 16 ரன்னிலும், விஜயசங்கர் 16 ரன்னிலும் வெளியேறி இந்திய அணியின் தொல்விக்கு வித்திட்டனர்.

இருந்தாலும் ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் வந்த கேதார் ஜாதவும், 7வது விக்கெட்டுக்கு இறங்கிய புவனேஸ்வர் குமாரும் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு சற்றே புத்துயிர் ஊட்டினர் . ஆனாலும் விதி விளையாடவே, புவனேஸ்வர் குமார் 46 ரன்னிலும், கேதார் ஜாதவ் 44 ரன்னிலும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

இறுதியில், இந்தியா 237 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 3 – 2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா வென்றுள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அதேபோல், ஒரு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்து, பிறகு அந்தத் தொடரை ஒரு அணி கைப்பற்றுவது இது 5ஆவது முறையாகும். தில்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடந்த 37 ஆண்டுகளில் 250 ரன்களுக்கு கூடுதலான இலக்குகளை இந்தியா எட்டியதில்லை. கடைசியாக 1982ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 278 ரன்களை சேஸ் செய்து வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here