ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி (68) அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சரான விவேகானந்த ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை இரவு தனியாக இருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து, விவேகானந்த ரெட்டியின் அறைக்கதவை தட்டியபோது அவர் பதிலளிக்கவில்லை. இதனால், ஹைதராபாதில் இருந்த அவரது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி விட்டார்.
நீண்ட நேரமாகியும் விவேகானந்த ரெட்டி அறைக் கதவை திறக்காததை அடுத்து சந்தேகமடைந்து, ஜன்னல் வழியே பார்த்தபோது அவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது என்று அவரது உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கடப்பா மாவட்ட எஸ்.பி.ராகுல் தேவ் சர்மா கூறுகையில், விவேகானந்த ரெட்டியின் படுக்கையறையிலும், குளியலறையிலும் ரத்தக்கறைகள் படிந்துள்ளன. நிகழ்விடத்திலிருந்து கைரேகைகளும், தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இந்த வழக்கை விசாரிக்க ஏடிஜிபி (சிஐடி) அமித் கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகவலறிந்ததும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது தாயார் விஜயம்மா ஆகியோர் புலிவேந்துலா விரைந்தனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவேகானந்த ரெட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கு முன்பு விவேகானந்த ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி 1998-இல் கொலை செய்யப்பட்டார். அவரது மூத்த மகன் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

விவேகானந்த ரெட்டி கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவேகானந்த ரெட்டியின் பொதுச்சேவை மதிப்புமிக்கதாக இருந்தது. அவரது, மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த விவேகானந்த ரெட்டி, தனது சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் 1989, 1994-ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999, 2004-ஆம் ஆண்டுகளில் கடப்பா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக தேர்வானார். 2009-ஆம் ஆண்டு ஆந்திர மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவேகானந்த ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here