ஒயிட் போர்டு

பொதுப் போக்குவரத்தில் கண்டதும் கேட்டதும்

0
1244

இரவு 10 மணி; சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம். கையில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டைப்பைகளுடன் ஒரு தாயும் மகளும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ”ஒயிட்போர்டுடி…..வா….” என்று அந்த 60 வயது தாய் ஓடுகிறாள். மகளும் பின்னால் ஓடுகிறாள். அந்தப் பேருந்தில் கிண்டிக்கு எட்டு ரூபாய்தான். மற்ற பேருந்துகளில் பதினைந்து ரூபாய். அந்தக் கட் சர்வீஸ் பத்து மணிக்கும் நிரம்பி வழிகிறது. அருகில் நிற்கும் நீல, பச்சை போர்டு பஸ்களில் இதைவிட கூட்டம் குறைவாக இருக்கிறது. ஒயிட் போர்டுக்காக மற்ற பேருந்துகளை விட்டு விட்டு அரை மணி நேரம் பனகல் பார்க் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பாட்டி ஒருவரைப் பற்றி ”பஸ்” என்கிற செய்தியில் நான் எழுதியிருக்கிறேன்.

”ஐந்து ரூபாய் வாங்கின இடத்தில் பதினோரு ரூபாய் கேட்கும்போது மக்கள் கோபப்படுகிறார்கள்” என்கிறார் கண்டக்டர் ஒருவர். அவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே பஸ், பேங்க் ஆஞ்சநேயர் கோவில் நிறுத்தத்தில் நின்றது. கூன் முதுகுப் பாட்டி ஒருவர் ஒரு பை நிறைய சாமானுடன் ஏறினார். நான் எழுந்து அவரை அமரச் சொன்னேன்; உட்கார்ந்ததும் பையைத் திறந்து ஆயிரம் ரூபாய் மாதாந்திர பஸ் பாஸை எடுத்துக் காட்டினார். ”பாருங்க; தினமும் டிக்கெட் எடுத்தா கட்டுப்படியாகாதுன்னு எல்லாரும் பாஸ் எடுக்கிறாங்க” என்றார் கண்டக்டர். முன்னைக் காட்டிலும் அதிக அளவிலான பயணிகள் மாதாந்திர பாஸ் எடுத்து விடுகிறார்கள். “தியாகராய நகர் டிப்போவில மட்டும் 80 லட்சம் ரூபாய்க்கு மாதாந்திர பாஸ் எடுக்கிறாங்க மக்கள்” என்றார் அவர்.

“இதைப் புரியாம டிப்போவில ஒரு அஞ்சு பேர் ஏன் தினசரி கலெக்ஷன் குறையுதுன்னு எங்களுக்கு டார்ச்சரக் குடுக்கிறாங்க; அவங்களுக்கெல்லாம் ஆளுக்கொரு ஜீப்; டிப்போவுக்கு மூன்று லட்சம் ரூபா சம்பளச் செலவு” என்று சொன்னபடி விவேகானந்தா கல்லூரி நிறுத்தத்துக்கு விசிலடித்தார். போக, வர பத்து ரூபாய்தான் என்பதால் மின்சார ரயில் மார்க்கத்தில் முன்னைவிட கூட்டம் பெருத்திருப்பதைப் பற்றி சொன்னேன். உண்மைதான் என்று ஆமோதித்தார். அப்போதுதான் நண்பர் ஒருவர் போனடித்தார். “உங்களுக்குத் தெரியுமா? மெட்ரோ ரயிலின் 40 ரூபாய் கட்டணத்துக்கு மக்களைப் பழக்கத்தான் பஸ் கட்டணத்தை உயர்த்தினார்கள்” என்றார். “அப்படியில்லை நண்பரே” என்றேன்.

சென்னையில் வாழும் சுமார் ஒரு கோடி மக்களில் 55 லட்சம் பேர் பஸ்களைப் பயன்படுத்துகிறார்கள்; சுமார் 15 லட்சம் பேர் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். 20 லட்சம் பேர் பைக்குகளில் போகிறார்கள். காரிலும் ஆட்டோவிலும் போகிற 10 லட்சம் மக்களுக்காகவும் பைக்குகளில் போகிற 20 லட்சம் பேருக்காகவும் மெட்ரோ ஓடுகிறது. தேவைப்படும்போது அவர்கள் மெட்ரோவுக்கு மாறிக் கொள்வார்கள். இதைச் சொன்னதும் நண்பர் தனது கான்ஸ்பிரஸி தியரியைத் தானே நொந்துகொண்டார். சரி, நடந்து போகிறவர்களும் சைக்கிளில் போகிறவர்களும் கணக்கில் இல்லையா என்றார்.

கிண்டியிலிருந்து இரவில் வீடுகளுக்கு சில கிலோமீட்டர் நடந்து போகிறவர்கள் ஆயிரத்துக்கும் மேல் என்றேன். அப்படியென்றால் சென்னையில் பல ஆயிரம் பேர் ஆட்டோவுக்குச் செலவு செய்ய பைசா இல்லாமல் நடக்கிறார்கள் என்றார். பைக்குக்குப் பெட்ரோல் போட முடியாமல் சைக்கிளுக்கு மாறிய நிறைய பேர் உண்டு என்றேன். உடம்பைக் குறைக்க சைக்கிளுக்கு மாறியவர்கள் சில ஆயிரம் என்றால் வேறு வழியில்லாமல் சைக்கிளுக்கு மாறியவர்கள் பல ஆயிரம் என்றேன்.

(தொடரும்……)

எழுந்தது என் தேசம்

நீங்கள் பார்க்காத அமெரிக்கா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here