தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியது.
மேலும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் வருகிற 31.12.2021ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

* 2022ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி 31.12.2021 தேதி இரவு சென்னை பெருநகரில் பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை பெருநகரில் அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடும் பட்சத்தில் தற்போதைய கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கொரோனா நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து  கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* பொதுமக்கள், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* 31.12.2021 அன்று இரவு 09.00 மணிமுதல் சென்னை பெருநகரில் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர் சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஓட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

* ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

* அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது.

* ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் என கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

* அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், ஞியி, இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.  

* கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து நுழைவு வாயில்களிலும் அகச்சிவப்பு கருவிகளை கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்.

சென்னை பெருநகர காவல் துறை 31.12.2021 தேதி இரவு முக்கிய இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து சென்றும், பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வானங்களை இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்த்து, சென்னை பெருநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here