இந்த உலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்

கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளில் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் மோசமான பாதிப்பு ஏற்பட்டதற்கும் சீனா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்துவந்த அதிபர் ட்ரம்ப், தற்போது மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் ஏற்படுத்திய சேதத்தைவிட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்தான் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது.

இதுவரை உலகளவில் 5.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நிரம்பியுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது

இந்நிலையில் அமெரிக்காவின் 244-வது சுதந்திரனத்தையொட்டி சல்யூட்அமெரி்க்கா நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் “ இந்த உலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த சீனாதான் காரணம்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையே வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ சீனாவுக்கு எதிராக வேறுபல விஷயங்கள் தொடர்பாக விரைவில் அதிபர் ட்ரம்ப் சில உத்தரவுகளைப் பிறக்கப் போகிறார். எந்தெந்த விஷயங்களில் அந்த உத்தரவு இருக்கும் என்பதை குறிப்பு மூலம் சொல்லி விடுகிறேன்.

சீனாவின் உற்பத்திப் பொருட்கள், மருந்து விற்பனை மற்றும் குடியேற்றம் தொடர்பாக அந்த உத்தரவுகள் இருக்கலாம். அதை முழுமையாக என்னால் கூற முடியாது” எனத் தெரிவித்தார்

ஆக, கொரோனா வைரஸால் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட சேதத்துக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்து வந்த அதிபர் ட்ரம்ப் விரைவில், சீனாவுக்கு எதிராக சில அதிரடியான முடிவுகளை எடுக்கப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here