‘ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படும்போது மௌனம் காக்க முடியாது’ – மலேசிய பிரதமர்

0
380

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பொதுப் பேரவையில் தாம் தெரிவித்த கருத்துகள் நடுநிலையானவை என்று மலேசியப் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் , காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருதரப்பும் வன்முறையைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதே மலேசியாவின் விருப்பம் என்றார்.

வன்முறையை நாடக்கூடாது என்பதே மலேசியாவின் கொள்கை என்றும், எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம் அல்லது சட்டரீதியில் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

இந்திய தரப்புக்கு ஏதேனும் வருத்தங்கள் இருப்பின் தம்மை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் மோடியிடம் தாம் தெரிவித்திருப்பதாகவும் மகாதீர் கூறினார்.

செப்டம்பர் 27ஆம் தேதி  ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றியபோது காஷ்மீர் விவகாரம் குறித்து மகாதீர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது 

காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐநாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்றும் மலேசியப் பிரதமர்  தெரிவித்திருந்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் உண்மையற்ற தகவல்களின் அடிப்படையில் கருத்துரைக்கக் கூடாது என மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்தது .

“மலேசியா, இந்தியா இடையிலான நல்லுறவுகளை நினைவில் நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று கருத்துரைப்பதை தவிர்க்க வேண்டும்” என்றும் இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டது.

இந்திய அரசின் இந்த அதிருப்தி குறித்து மகாதீர் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.

மலேசியாவுக்கு எதிர்ப்பு

இதையடுத்து ‘பாய்காட் மலேசியா’ என்ற (# boycott Malaysia) ‘ஹேஸ்டேக்’கை இந்தியர்கள் உருவாக்கி மலேசியாவையும் அதன் பொருட்களையும் புறக்கணிக்குமாறு பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை மகாதீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இத்தகைய பிரசாரத்தால் மலேசியா எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றார். பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யாவில் சந்தித்தபோதே காஷ்மீர் விவகாரம் குறித்து அவரிடம் பேசியதாக அவர் சுட்டிக் காட்டினார்.

“அந்தச் சந்திப்பின் போது பேசியதன் அடுத்தகட்டமாகவே ஐநா பொதுப் பேரவையில் எனது உரை அமைந்தது. நாடுகளுக்கிடையே வன்முறையையோ, மோதல்களையோ பார்க்க மலேசியா விரும்பவில்லை. அதைத்தான் நாம் தெரிவித்தோம். அதேவேளையில் இந்தியா குறித்த மென்மையான விமர்சனங்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருப்பது உண்மை,” என்றார் 

ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படும் போது மௌனம் காக்க முடியாது என்கிறது மலேசியா.

இதற்கிடையே மலேசியாவைப் புறக்கணிக்குமாறு மேற்கொள்ளப்படும் பிரசாரத்தால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுதின் அப்துல்லாவும் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் இந்தியா, மலேசியா இடையேயான இருதரப்பு உறவுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

நடுநிலைத்தன்மை, இஸ்ரேல் தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுடனும் வர்த்தகம் மேற்கொள்ளும் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளதாகவும், பிற நாடுகளின் உள் விவகாரங்களில் மலேசியா தலையிடுவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எனினும் சில தருணங்களில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

“இரண்டு மில்லியன் கம்போடிய மக்கள் கொல்லப்பட்டபோது உலகம் அமைதி காத்தது. அதனால்தான் ரோஹிங்யா விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்தோம். காஷ்மீர் விவகாரமும் அதுபோன்ற ஒன்றுதான். இந்தியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடரவும் பாதுகாக்கவும் விரும்புகிறோம். அதேவேளையில் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து மௌனம் காக்க முடியாது,” என்று டத்தோ சைபுதீன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மலேசியாவையும், அந்நாட்டின் பொருட்கள், விமான நிறுவனம் சுற்றுலா உள்ளிட்ட சேவைகள் என அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் எனவும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here