ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளக் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினார். 5 முறை முதல்வராக இருந்து வரும் மூத்த அரசியல் தலைவர் நவீன் பட்நாயக் உடன் அவரது இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் மரியாதை நிமித்தமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது, நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன். எனது கேள்விகளை அவரிடம் எழுப்பி மிக அருமையான பதில்களைப் பெற்றேன்.

இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் நவீன் பட்நாயக்கை உற்று நோக்குவதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியால் நிறைய அரசியல் பாடம் அறிய முடியும் என்று நம்புகிறேன். அவரது அறிவுரையைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில்,

தனியார் விழாவில் பங்கேற்கபதற்காக கமல்ஹாசன் இங்கு வந்துள்ளார். அவரது வருகை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாநிலத்தின் விருந்தினராக கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார்.

தனது சினிமா மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக கமல்ஹாசன் என்னிடம் கலந்து ஆலோசித்தார். அடுத்தமுறை ஒடிஸாவில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் படி கமல்ஹாசன் வருகை தர வேண்டும். கோனார்க், சிலிகா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here