ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

Journalist Arul Ezhilan's Book calls Ockhi deaths "a genocide"

0
1651

ஒக்கி புயல் பேரிடரில் ஏற்பட்ட மரணங்கள் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியங்களால் ஏற்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன; ”ஒக்கி மரணங்களை இனப்படுகொலை என்கிறேன் நான்” என்று தலைப்பிட்டு பத்திரிகையாளர் டி.அருள் எழிலன் வெளிக்கொண்டு வந்துள்ள நூல்தான் இந்தப் பேரிடரைப் பற்றிய முதல் ஆவணம்; ”அம்மே எம் புள்ளய எனக்கி கொடுத்திடம்மா” என்று கடலைப் பார்த்து அழுகிற மரிய புஷ்பத்தின் உண்மைக் கதையோடு ஆரம்பமாகிறது நூல்; ”என் அண்ணன் என் கைல செத்தாம்லியா அவந்தான் எனக்கு கடத்தொழில் சொல்லிக் கொடுத்தான். எனக்கு சொல்லிக் கொடுத்தவன் என் கைல இருந்தே கடலம்மாகிட்ட போயிட்டான்”….மவுனமாக அந்த இடது கையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். அவர் எதுவும் பேசவில்லை. – இது உயிர் தப்பி வந்த தூத்தூர் அந்தோனி தாசனைப் பற்றிய பதிவு.

ஒக்கி புயலின் தீவிரத்தை இந்தியாவும் தமிழ்நாடும் புரிந்துகொள்ளாமல் இருந்த நாட்களில் சமூக வலைத்தளங்கள் வழியாக தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை விழித்தெழ செய்த பத்திரிகையாளர் அருள் எழிலன்; ஒக்கி பேரிடரைப் பற்றிய அரசுகளின் புரியாமை என்பது அலட்சியத்திலிருந்தும் சக மனித உயிர்களைச் சமமாகப் பாவிக்க முடியாத அதிகார மனதிலிருந்தும் உருவானது; 2004இல் சுனாமி தாக்கியபோதே அரசுகள் கடலை மையமாக வைத்தும் சிந்திக்க வேண்டுமென்ற குரலைக் கடலோடிகள் முன்வைத்தார்கள். 14 ஆண்டுகளுக்குப் பின்னரும் அரசுகளின் திட்டமிடுதலிலும் சிந்தனைப் போக்கிலும் கடல் இடம்பெறவில்லை என்பதை ஒக்கி பேரிடர் அம்பலப்படுத்தியிருக்கிறது. மக்களின் கூற்றுகளை உண்மையென்று ஏற்க மறுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிடிவாதம் இதற்கு நல்ல உதாரணம்; குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவ மக்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி “எங்கள் உண்மைகளுக்குச் செவிகொடுங்கள்” என்று சொன்ன பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மக்களின் சொற்களுக்கு மதிப்பு கிடைக்க ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட உயிர்களை இழப்பதற்குக் காரணம் அரசுகளின் அலட்சியப் போக்கு என்பதை இந்த நூலில் நிறுவுகிறார் எழிலன்; அரசுகளுக்கு அஞ்சாத சுதந்திர உணர்வு கொண்ட கடல் பழங்குடிகள் இந்தப் பேரிடரில் பழிவாங்கப்பட்டுள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். மத்திய அரசின் இனயம்புத்தன் துறை துறைமுகத் திட்டத்தை அடித்து விரட்டியதற்காக உயிர்களைக் காக்காமல் இந்த மக்களை அனாதரவாக தவிக்க விட்டு வேடிக்கை பார்த்தன மத்திய, மாநில அரசுகள் என்று நேரடியாக குற்றம் சாட்டுகிறார். அண்டை மாநிலமான கேரளாவில் அரசு உடனடியாக களமிறங்கி கப்பற் படையின் ஆதரவைப் பெற்றதுபோல தமிழ்நாட்டு அரசால் ஏன் உதவிகளைப் பெற முடியவில்லை என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார் எழிலன்; மீன் வளத் துறையில் மீனவர்கள் இல்லை; கடலோரக் காவல் படையில் மீனவர்கள் இல்லை; கப்பற் படையில் மீனவர்கள் இல்லை. கடல் அறிவு கொண்ட சமூகம் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் இல்லை என்பதை இந்தப் பேரிடர் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டு மரபின் முக்கிய ஆளுமைகளான ஆழ்கடல் கடலோடிகளைக் கொண்ட கிராமங்கள்தான் பெரும் எண்ணிக்கையில் உயிர்களைத் தொலைத்துள்ளன; இந்த அழிவிலிருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேலெழுவதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு தேவைப்படுகிறது; அரசியல்படுத்தப்படாத ஓர் உடலுழைப்புச் சமூகத்தை ஜனநாயக சிஸ்டத்தின் அரசுகள் எப்படி எளிதாக புறக்கணித்துவிட முடியும் என்பதற்கான சான்றுதான் ஒக்கி புயல் பேரிடர். உயிர்களுக்குச் சம மதிப்பில்லாத சாதிய சமூகத்தின் குரூர முகத்தை இந்தப் பேரிடர் அடையாளம் காட்டியுள்ளது. இந்த இடைவெளியைக் கடந்து மக்களைச் சமமாக சங்கமிக்க வைக்கிற அந்தப் பெருமொழியை நோக்கி நமது உரையாடலை முன்னெடுத்துச் செல்கிறது டி.அருள் எழிலனின் பேரன்பு.

ஒக்கி மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்
டி.அருள் எழிலன்
பூவுலகின் நண்பர்கள்,
106/2, முதல் தளம், கனக துர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன் கோவில் தெரு, வட பழனி, சென்னை – 26
தொலைபேசி: 9444065336; விலை: ரூ.50

ஒக்கி சொந்தங்களுக்கு உதவ இந்த இணைப்பிற்குச் சென்று ஆன்லைனில் நிதியுதவி வழங்குங்கள்.

இதையும் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

இதையும் படியுங்கள்: India’s flawed policy led to loss of over 300 lives

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here