ஐபிஎல் 2020: இன்றைய போட்டி விபரம்

0
187

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது.

நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற முதல்ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 

இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

துபாயில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிள் பெங்களூரு அணியும், வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணியும், இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 6 ஆட்டங்களிலும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

அணியில் உலகத்தர வீரர்களைக் கொண்டிருந்தும் கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி‌ மிகவும் கவலையளிக்கும் விதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. 

பெங்களூரு அணி 2009 ஆம் ஆண்டு கெவின் பீட்டர்சன் தலைமையிலும், 2011 ஆம் ஆண்டு டேனியல் வெட்டோரி தலைமையிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.

அதன் பின்பு அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விராட்கோலி. அவர் பொறுப்பேற்ற முதல் 3 ஆண்டுகளில் பெங்களூரு அணி “ப்ளே ஆஃப்”வரை கூட முன்னேறவில்லை. பின்னர் அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டு 2015 ஆம் ஆண்டு 3-ஆவது இடத்தை பெற்றஆர்.சி.பி, 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

2016 ஆம் ஆண்டுக்குப் பின்பு ஆர்.சி.பி அணிக்கு பெரும் ஏமாற்றமே. கடந்த 3 சீசன்களில் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி பிடித்த அதிகபட்ச இடமே 6 தான்.

புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார். பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எவ்வளவு ரன்களைக் குவித்தாலும் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கி விடுவார்கள் என்ற விமர்சனம் ஆர்.சி.பி மீது நீண்ட காலமாக உள்ளது. இதனைக் களைய கிறிஸ்மோரிஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸ்சன் ஆகியோரும் அவர்களுக்கு வலு சேர்க்க வேகப்புயல்கள் ஸ்டெய்ன், நவ்தீப் சைனி,  உமேஷ் யாதவ் ஆகியோரும், சுழற்பந்தில் சாஹல், வாஷிங்டன் சுந்தர் வலு சேர்க்கிறார்கள்.

வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் மீண்டும் அதே அதிரடியைத் தொடர்வதற்கு காத்திருக்கிறார்கள்.

புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என திறமையான வீரர்களும் வலு சேர்க்கிறார்கள்.

இந்நிலையில்,சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் களம் இறக்கப்பட்டால் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here