இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகள் பெற்று பேட்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

விராட் கோலி கடந்த ஆண்டில் 14 ஒரு நாள் போட்டியில் 1,202 ரன் எடுத்தார். இதில் 6 சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 133.55 ஆகும். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 166 ரன் குவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 12 ஆம் தேதி தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆரம்பமாகும் நிலையில் இந்த பட்டியல் வெளிவந்திருக்கிறது.

மேலும் இந்திய அணியின் ரோகித் சர்மா 871 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் அவர் 19 ஆட்டத்தில் 1030 ரன் எடுத்தார். இதில் 5 சதங்கள் அடங்கும். சராசரி 73.57 ஆகும். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் தவான் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

3 முதல் 8 இடம் வரை, முறையே டெய்லர்(நியூசிலாந்து), ஜோ ரூட்(இங்கிலாந்து), பாபர் ஆசம்(பாகிஸ்தான்), டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா), டு பிளிசிஸ்(தென் ஆப்பிரிக்கா), ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் உள்ளனர். குயிண்டன் டி காக்(தென் ஆப்பிரிக்கா) 10வது இடத்தில் உள்ளார்.

தரவரிசைப் பட்டியலில் பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், சாஹல் 6வது இடத்திலும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் 2வது இடத்திலும், ரபாடா(தென் ஆப்பிரிக்கா) 4வது இடத்திலும், முஸ்டாபிஷூர் ரகுமான்(வங்காள தேசம்) 5வது இடத்திலும் உள்ளனர்.

அணிகளை பொறுத்தவரை இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 121 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும் நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளியுடன் 5வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளியுடன் 6வது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here