சாதாரண சூழ்நிலையில், நடந்துக் கொண்டிருக்கும் வங்கி மோசடி விசாரணைப் பற்றி மத்திய நிதி அமைச்சர் கருத்து கூறும் போது அது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறது. ஒரு மாத காலமாக அதிகாரத்தில் இல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வரும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாட்டின் மிகப்பெரிய சுதந்திரமான நிறுவனமான சிபிஐ எவ்வாறு , எப்படி வேலை செய்ய வேண்டும் என்று கூறும் போது அது அரசியலில் புயலை உருவாக்குகிறது.

திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அவர் நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜெட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜெட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ [investigative adventurism] என தனது ப்ளாகில் (blog) எழுதுகிறார்.

புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜெட்லி ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்குப் பற்றி எழுதியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன். ஐசிஐசிஐ வழக்கில் விசாரணையில் இருக்கும் முக்கியமானவர்களின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது.

வழக்கின் பிரதான இலக்கு எதுவோ, அதை நோக்கியே சிபிஐ அதிகாரிகள் தங்களின் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உண்மையான, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், நிஜமான குற்றவாளிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து, சாகச ரீதியில் விசாரணை மேற்கொள்வதென்பது, ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது, சில நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இதனால், சம்பந்தப்பட்ட நபர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

குற்றவாளிகளை விட்டுவிட்டு எல்லோரையும் விசாரிக்கும்போது வழக்கு திசைமாறி விடாதா ? விசாரணையில் வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளதுபடி வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜெட்லி. அதாவது சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.

இந்த வழக்கின் பின்னணி – யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?

அருண் ஜெட்லி குறிப்பிட்டது ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடாக ரூ.3,250 கோடி கடன் வாங்கி நிதி மோசடி செய்தது தொடர்பாக வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ததைக் குறித்துதான்.

சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் தொடங்கிய நூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில் விடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் 64 கோடி ரூபாய் முதலீடு செய்தார். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே தூத், ஐசிஐசிஐ வங்கியிடம் கடன் கேட்டு அணுகினார். 2012 ஆம் ஆண்டு அவருக்கு மிகப்பெரிய தொகையாக ரூ.3,250 கோடியை கடனாக ஐசிஐசிஐ வங்கி அளித்தது. கோச்சாரின் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு பிரதிபலனாகவே விடியோகான் நிறுவனத்துக்கு, ஐசிஐசிஐ வங்கி கடன் அளித்தது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார்.

ஆனால், ஐசிஐசிஐ வங்கியில் நடந்த முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை. ஐசிஐசிஐ-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்ட்மென் சாக்ஸின் (Goldman Sachs) தலைவர் சஞ்ஜோய் சட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார். ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர். கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜெட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார். சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜெட்லி.

மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல. சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது, அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்.

எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது என்கிறார் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.

கடந்த 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சியில் மோடி அரசு, ஜனநாயகத்தின் அமைப்புகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது. . நாட்டின் நிதி அமைச்சர் சுதந்திரமான நிறுவனம் மேற்கொண்டிருக்கும் வழக்குப் பற்றி கருத்து கூறுகிறார்.

கார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர். மீதமிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார். இதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதுதான் நிதிஅமைச்சரின் வேலையாக இருக்கிறது போலும் . அதனால்தான் வழக்கு பற்றி கருத்து கூறுகிறார். உடனடி அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற பொது நிறுவனங்களை மிதிப்பதற்கு தயங்காது மோடி அரசு .

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கார்பரேட் முதலாளிகளுடன் கைக்கோர்த்து அவர்களின் நலனுக்காக செயல்படுவது நல்லதல்ல.

Courtesy : TheWire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here