ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படை அதிகாரிகள் கேரளா விரைகின்றனர்.

மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படை இன்று செவ்வாய்க்கிழமை  கேரள மாநிலம் கொல்லம் விரைகிறது.

மேலும், விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கும் ஐஐடியில் பாத்திமாவுடன் படித்த மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப், சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாத்திமா, விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் கடந்த 8-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் சாதாரண சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இதில், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி.யில் பணிபுரியும் இணைப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம்   என்றும், மேலும் இரு பேராசிரியர்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தியாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் மீண்டும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் ஐ.ஐ.டி. வளாகத்தில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர், மத்தியக் குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு வழக்கின் விசாரணையை மாற்றி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் எஸ்.மெக்லினா நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் உதவி ஆணையர் பிரபாகரன், ஆய்வாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக் குழு கூடுதல் காவல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் செயல்படும். இந்நிலையில் பாத்திமா தற்கொலைத் தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கை கடந்த வாரம் பதிவு செய்தனர்.

உள்மதிப்பீட்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்ததில் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால், உள் மதிப்பீட்டு தேர்வில் மதிப்பெண் அளிப்பதற்கு பேராசிரியர்கள் பின்பற்றும் நெறிமுறைகள் குறித்து மத்தியக் குற்றப்பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேவேளையில் பாத்திமாவுக்கு திட்டமிட்டு உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ் வழக்குத் தொடர்பாக கோட்டூர்புரம் காவலர்கள் ஏற்கெனவே விசாரணை செய்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பாத்திமாவின் செல்லிடப்பேசி தொடர்பான தடயவியல் துறை, சைபர் குற்றப்பிரிவு ஆகியவற்றின் அறிக்கை கிடைத்தால், வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here