ஐஎன்எக்ஸ் வழக்கு: சிபிஐ கேட்ட முக்கியமான கேள்விகள்; மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்

0
288


மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் (73) நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அவரைக் கைது செய்து தங்கள் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். 

தில்லி உயர் நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது முதல், நேற்று இரவு சிதம்பரம் கைது செய்யப்படும் வரை நீடித்த பரபரப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

நேற்று இரவு அவரது வீட்டின் சுவரை ஏறி குதித்து, சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், சிபிஐ அலுவலகத்துக்கு சிதம்பரத்தைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்துக்கு இரவு உணவை வழங்கினார்கள். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள சிதம்பரம் மறுத்துவிட்டார்.

பிறகுதான், சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தங்களது ஏவுகணைக் கேள்விகளை ஆரம்பித்தனர்.

முதற்கட்டமாக சில அடிப்படையான விஷயங்களை சிதம்பரத்திடம் கேட்டறிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் அவரிடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான கேள்விகளை அதிகாரிகள் அடுக்கினார்கள்.

விசாரணையின் போது சிபிஐயின் மூத்த அதிகாரிகளுடன், சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லாவும் உடன் இருந்தார். சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு சந்தேகமாக இருக்கிறது, தெரியவில்லை, பதில் சொல்ல முடியாது என்ற பதில்களே சிதம்பரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு தொடர்பாக மிக முக்கியமான 20 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

1. இந்திராணி முகர்ஜியையும், அவரின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜியையும் எப்படி உங்களுக்கு தெரியும், யார் மூலம் அறிமுகமானார்கள்?

2. இந்திராணி முகர்ஜியையும், பீட்டர் முகர்ஜியையும் அறிமுகம் செய்யும் போது, ஏதேனும் பத்திரிகையாளர்கள் உடன் வந்தார்களா?

3. பணப்பரிமாற்றத்தில் பத்திரிகையாளர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா?

4. இந்திராணி முகர்ஜியிடம்  கார்த்தி சிதம்பரம் உதவுவார், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துவிடுவார், அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னீர்களா?

5. செஸ் மேனேஜ்மென்ட் , அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் ஆகிய இரு நிறுவனங்கள் குறித்து இந்திரா முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் குறித்து என்ன தகவல்?

6. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தந்த விஷயத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது?

7. கார்த்தி சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனத்துக்கு பணம் ஏதும் பரிமாற்றப்பட்டதா?

8. சிபிஐ ஆஜராக அழைக்கும் போது ஏன் ஒளிந்து கொள்ள முயற்சித்தீர்கள்?

9. கடந்த 24 மணிநேரமாக எங்கு தங்கி இருந்தீர்கள்?

10 . எந்தவிதமான செல்போன் எண்ணை பயன்படுத்தினீர்கள், வேறு ஏதாவது புதிய செல்போன் எண்ணை பயன்படுத்த முயற்சித்தீர்களா?

11. உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உடனடியாக யாரைச் சந்தித்தீர்கள்?

12. வீட்டில் நோட்டீஸ் ஒட்டியபின் ஏன் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை?


13. உங்கள் பெயரிலும், மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரிலும் எத்தனை போலி நிறுவனங்கள் இருக்கின்றன?

14. இங்கிலாந்து நிர்வகிக்கும் தீவுகளில் இருந்து கார்த்தி சிதம்பரம் ஏன் பணம் பெற்றார்?

15. இங்கிலாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் சொத்துக்களை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

16. பார்சிலோனா டென்னிஸ் கிளப்பை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?

மேலும் ஐஎன்எஸ் மீடியா குறித்தும், போலி நிறுவனங்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்றில் 20 கேள்விகள் கேட்டுபதில் பெற்ற நிலையில் 2-ம் சுற்று விசாரணையில் கேள்விகள் இன்று காலை 8 மணியில்இருந்து கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here