ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

The CBI and the Enforcement Directorate have opposed Mr Chidambaram's plea on the ground that his custodial interrogation was required.

0
185


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம் . 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையும், சிபிஐயும் கைது செய்யாமல் தடுக்க முன்ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கெளர், கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி, மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின்போது, ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க அமலாக்கத் துறையும்,  சிபிஐயும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரிடம் விசாரணை நடத்தியபோது கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காததால், அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் இரு விசாரணை அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

இதனிடையே, ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.