ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு; ப சிதம்பரத்தை கைகாட்டியதால் இந்திராணி முகர்ஜியை விடுவித்த சிபிஐ

0
467

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு, இந்த வழக்கில் அப்ருவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் தான் காரணமாக கூறப்பட்டது .  இந்நிலையில் இந்திராணி முகர்ஜியின் பெயரை குற்றப்பத்திரிகையில்  சிபிஐ சேர்க்கவில்லை. 

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ஐஎன்எக்ஸ் மீடியாவின் பீட்டர் முகர்ஜி, பட்டய கணக்காளர் பாஸ்கர் ராமன், நீதி ஆயோக் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார், சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் அனுப் கே. பூஜாரி, ஐஏஎஸ் அதிகாரிகளான பிரபோத் சக்ஸேனா, ரவீந்திர பிரசாத் ஆகியோரின் பெயரும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், ஏஎஸ்சிஎல் & செஸ் மேனேஜ்மன்ட் சர்வீசஸ் நிறுவனம் ஆகியவற்றின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்திராணி முகர்ஜியின் பெயர்  சிபிஐ சேர்க்கவில்லை. 

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சிபிஐ கடந்த 2017 மே 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கடந்த 21-ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து, சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டது. பின்னர், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் வரும் 24-ஆம் தேதி வரை அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்திராணி முகர்ஜி 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு  வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு, இந்த வழக்கில் அப்ருவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் தான் காரணமாக கூறப்பட்டது .  

ஐஎன்எக்ஸ் மீடியாவின் தலைவர்களாக இருந்தவர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவரான பீட்டர் முகர்ஜி. கடந்த 2007-இல் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்பதற்காக நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தை அவர்கள்அணுகினர். ஆனால், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகினார். அப்போது, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தில் ரூ.4.6 கோடி அளவிற்கு பங்குகளை விற்பதற்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. 

பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்து கொள்வதற்காக, தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த பிள்ளைகளில் மகள் ஷீனா போராவை தங்கை என்றும், பிள்ளையை தம்பி என்றும் அறிமுகம் செய்து வைத்தவர்  இந்திராணி முகர்ஜி. 
 கடந்த 2015, ஆகஸ்டில் இந்திராணி முகர்ஜி, தனது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் இந்திராணி முகர்ஜி, அப்ருவராக மாறுவதற்கு விருப்பம் தெரிவித்து டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், தனது நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற்றுத் தருவதற்கு ப. சிதம்பரம், உதவுவதாகக் கூறினார் என்றும், அதற்கு கைமாறாக, கார்த்தி சிதம்பரத்துக்கு வியாபார நோக்கில் உதவ வேண்டும் என சிதம்பரம் கேட்டுக் கொண்டார் என்றும் அமலாக்கத் துறையின் வாக்குமூலத்தின் போது இந்திராணி முகர்ஜி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததாக கூறப்பட்டது .  
இதைத் தொடர்ந்து, சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்தது.  

வழக்கு கடந்துவந்த பாதை…
2017
மே: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ நிதிப் பரிவர்த்தனை முறைகேடு வழக்குப் பதிவு
ஜூன்: வழக்கில், கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு
அக்டோபர்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, தனக்கும், தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம்
2018
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்குப் பதிவு செய்தது
பிப்ரவரி: வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ
மார்ச்: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் தடை
மே: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு
ஜூலை: நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்யமாலிருக்க முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஜூலை: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் சிதம்பரத்தை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
அக்டோபர்: ஐஎன்எக்ஸ் மீடியா நிதி மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா, பிரிட்டன், ஸ்பெயினில் உள்ள ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
2019 
ஜனவரி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது 
ஜூலை: ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திரானி முகர்ஜி “அப்ரூவர்’-ஆனார் 
ஆகஸ்ட்: கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக புது தில்லியின் ஜோர் பாக் பகுதியிலுள்ள வீட்டை அமலாக்கத் துறை முடக்கம் செய்திருந்த நிலையில், அந்த வீட்டிலிருந்து வெளியேற கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுறுத்தல் 
ஆகஸ்ட் 20: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த தில்லி உயர்நீதிமன்றம், தனது உத்தரவுக்கு 3 நாள்கள் தடை கோரிய ப.சிதம்பரம் தரப்பு கோரிக்கையையும் நிராகரித்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் புதன்
கிழமை கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 2011-இல் சிபிஐ அலுவலகத்தின் திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சராக சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவராவார். அன்றைக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றவர், இன்றைக்கு விசாரணை கைதியாக அதே அலுவலகத்தில் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.
2011, ஜன் 30-ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற சிபிஐ அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று, பார்வையாளர் குறிப்பேட்டில் சிதம்பரம் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டிருந்தார். அதில், “1985 முதல் சிபிஐயுடன் நெருங்கிப் பணியாற்றி வருகிறேன். இப்புதிய அலுவலகத்தைப் பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்த இடம் சிபிஐயை மென்மேலும் வலிமைப்படுத்தட்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here