ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிபிஐ காவலில் ப. சிதம்பரம்

0
206


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று (செவ்வாய்கிழமை) மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, ப. சிதம்பரம் இல்லத்துக்கு விரைந்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பித்தனர். 

இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளியன்று நடைபெறுகிறது. 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன் தரப்பு வாதங்களை விவரித்த சிதம்பரம், இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் என்னுடைய பெயர் கூட இடம்பெறவில்லை என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் தனது வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோருடன் தனது இல்லத்துக்குச் சென்றார். 

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் இல்லத்துக்குச் சென்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலையில், ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். இது கைது நடவடிக்கை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. அதனால், ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளாரா, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளாரா என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.