ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் முன்னாள் உரிமையாளர் டாடா

0
555

87 வருடங்களுக்கு முன்பு டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் வாங்க அதே நிறுவனம் விரும்புகிறது.

கடந்த 1932 ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடா தொடங்கிய விமான சேவை நிறுவனம் அதன் பிறகு அரசுடைமை ஆக்கப்பட்டு ஏர் இந்தியா என்னும் பெயரில் இயங்கி வருகிறது.  கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியா கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.   கடன் சுமைகள் அதிகரித்து வருவதால் இந்த விமான நிறுவனத்தை நடத்துவதில் அரசுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு இந்நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க முன் வந்தது.  ஆயினும் சரியான விலை கிடைக்காததால் இந்த விற்பனை நடைபெறவில்லை.   அப்போது டாடா நிறுவனம் இந்த பங்குகளை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆயினும் அப்போது அரசு தெரிவித்திருந்த பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டாடா குழுமம் ஒப்புக் கொள்ளாததால் இந்த விற்பனை நடைபெறவில்லை.

சமீபத்தில் அரசு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் முழுவதையும் விற்க உள்ளதாக அறிவித்தது.  தற்போது டாடா குழுமம் ஏர் ஆசியா மற்றும் விஸ்தாரா ஆகிய விமானச் சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறது.  எனவே மூன்றாவதாக ஏர் இந்தியா நிறுவனத்தையும் டாடா வாங்கலாம் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  இது குறித்து டாடா குழுமத் தலைவர் என் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது  – நாங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புகிறோம்.  எங்களது நிபுணர்கள் குழு இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.  இது டாடா சன்ஸ் நிறுவனத்தின் முடிவு இல்லை.  விஸ்தாராவின் முடிவு ஆகும்.  ஏனெனில் மூன்றாவதாக ஒரு விமான சேவை நிறுவனத்தை இயக்குவதை விட புதிய நிறுவனத்தைப் பழைய நிறுவனத்துடன் இணைக்க விரும்புகிறோம்.  இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.” என்றார். 

மேலும் ஏர் இந்தியா விற்பனைக்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் அவர் பேசிய போது, இதற்கு முன்னர் விற்பனை முயற்சி தோல்வியடைந்ததிலிருந்து பாடம் கற்றுள்ளதாகவும், இம்முறை கண்டிப்பாக ஏர் இந்தியா விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா தனியார்மயமாகும் என்று கூறியுள்ள அவர், வரும் நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தில் சிவில் விமானப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இத்துறையில் அந்நிய முதலீடு அதிகமாகக் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம் ஏர் இந்தியா . 73 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்நிறுவனத்தில் 20,000 பேருக்கு மேல் வேலைபார்க்கின்றனர். 18.6 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள போதும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட இயலாமல் தவிக்கிறது. காரணம், கடுமையான நிதி நெருக்கடியும், கடன் பிரச்சினையும் ஏர் இந்தியாவுக்கு இருக்கிறது. மேலும், சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படாததால் 120 விமான ஓட்டிகள் ராஜினாமா செய்தனர்.

ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கும் ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. சென்ற ஆண்டில் ஏர் இந்தியா விற்பனைக்கான முயற்சியில் 74 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தை வாங்க எவரும் முன்வரவில்லை.

தற்போதைய விற்பனை முயற்சியில், ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதோடு, அதை வாங்குபவர்கள் வேண்டுமென்றால் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அரசு சலுகை வழங்கியுள்ளது.

 https://economictimes.indiatimes.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here