ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ததற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
கடனில் சிக்கியிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமத்தின் டலேஸ் நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் ஏலத்தில் வாங்கியது. அதில், ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்துவதற்கும், எஞ்சிய ரூ.15,300 கோடியை ஏர் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா சன்ஸ் குழுமம் ஒப்புக்கொண்டது.
இந்த விற்பனையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். இந்த விற்பனை நடைமுறை சட்ட விரோதமானது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்பிரமணியன் சுவாமி, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டலேஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். விரிவான விவரங்கள் வலைத்தளத்தில் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.