ஊடகவியலாளர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக பாஜக அரசு மீது வெள்ளிக்கிழமை காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

மக்களவையில் உடனடிக் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இது குறித்து பேசினார்.

பாஜக அரசின் ஆட்சியில் ஊடகங்கள் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மூத்த நிர்வாகி ஒருவர், பாஜக அரசின் அழுத்தம் காரணமாக அந்தப் பணியை ராஜிநாமா செய்தார். மேலும், 2 செய்தித் தொகுப்பாளர்களும் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தங்கள் பணியைச் செய்ய விடாமல் ஊடகங்களைத் தடுப்பதையும், அரசின் திட்டங்களைக் குறை கூறும் ஊடகங்களை தடுப்பதையும் பாஜக அரசு வழக்கமாக செய்து வருகிறது. ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து மிரட்டியும் வருகிறது.
அரசின் தோல்வித் திட்டத்தைச் சரியாக மதிப்பீடு செய்து ஒளிபரப்பியதற்காக மூவரும் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும். நாட்டிலுள்ள அனைவருக்கும் கருத்து சுதந்தரத்தை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. தற்போது அந்தச் சுதந்தரத்தை பாஜக அரசு பறித்து வருகிறது என்று கார்கே குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பதில் கூறினார்.

பாஜக அரசு ஊடகத்துக்கு முழுச் சுதந்தரத்தை அளித்துள்ளது. அரசைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பியதற்காகவே, அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், அந்தத் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. மதிப்பீடு குறைந்துகொண்டே வருகிறது.

பணியாளர்கள் நீக்கப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்க முடியுமே அன்றி, அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை . ஊடகவியலாளர்களை மிரட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் ராஜ்யவர்தன் ரத்தோர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here