ஏன் 6 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கின்றது காக்னிசன்ட்?: நற்றமிழன்

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

0
283
Headquarters of Cognizant Technology Solutions in Chennai

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூச‌ன்ஸ் (Cognizant – CTS), 6,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து, கடந்த சில வாரங்களாக பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், புனே கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தப் பணி நீக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதற்காக இந்தப் பணி நீக்கம்?

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படாத பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வது வழக்கமான நடவடிக்கைதான் என்று கூறுகிறது காக்னிசன்ட் நிர்வாகம். இந்த பணி நீக்கங்கள் மட்டுமின்றி இந்த ஆண்டு திறன்மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய உயர்வும் (Performance Appraisal based Income Hike) கடந்த ஆண்டுகளைப் போல இருக்காது, மிகக் குறைந்த ஊதிய உயர்வே இருக்கும் என நிறுவனம் பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது.

காக்னிசன்ட் நிர்வாகம் இன்று கூறுவதைத்தான் 30 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்ட TCS (Tata Consultancy Service) நிர்வாகமும் 2014 டிசம்பரில் கூறியது. இதைத்தான் எல்லா ஐ.டி நிறுவனங்களும் பெரிய அளவிலான பணி நீக்கங்களின்(Mass Layoff)போது காரணமாகக் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்: பாகுபலி ஏன் முக்கியமான திரைப்படம்? – ஓர் அலசல்

பணி நீக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?

“காக்னிசென்ட் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் தங்களது பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்கவும், டிவிடெண்ட்(ஈவுத்தொகை = இலாபத்தில் பங்கு) அளிக்கவும் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்குவதாக முன்னர் அறிவித்துள்ள‌து”.

காக்னிசென்ட் நிர்வாகம் 6000 மென்பொருள் வல்லுநர்களை பணியை விட்டு நீக்குவதற்கான உண்மையான காரணம் இது தான். ஒருபுறம் பங்கு சந்தையில் மக்கள் கையில் உள்ள பங்குகளைப் பெற வேண்டும், மறுபுறம் அதற்கான செலவையும் இலாபத்தில் எந்த ஒரு சிறு குறையுமின்றி ஈடு செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் விளைவே இந்தப் பணிநீக்கம்.

எல்லா நிறுவனங்க‌ளுக்கும் இலாபம் ஒன்றே முதல் குறிக்கோள். அதுவும் கொள்ளை இலாபம். அந்த இலாபத்தைக் குறைத்துக் கொள்ள எந்த நிறுவனமும் விரும்புவதில்லை. ஐ.டி நிறுவனங்களில் எப்பொழுதெல்லாம் இலாபம் நிர்வாகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் குறைகின்றதோ, அப்பொழுதெல்லாம் பெரிய அளவிலான பணி நீக்கங்களை அவர்கள் திட்டமிடுகின்றார்கள்.

அதே சமயம் இந்தப் பெரிய அளவிலான‌ பணி நீக்கங்களினால் தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பணி நீக்கப்படுபவர்களெல்லாம் திறமை அற்றவர்கள், சிறப்பாக செயல்படாதவர்கள் என பொய்யான முத்திரை குத்துகின்றனர். அது மட்டுமின்றி மறுபுறம் பெரிய அளவில் புதிய ஊழியர்களை எடுக்கும் அறிவிப்புகளையும் கொடுக்கின்றனர்.

இதையும் பாருங்கள்: நந்தினி

யூஸ் அண்ட் த்ரோ பேப்பராக மாறும் ஐ.டி பணியாளர்கள்

எந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் ஐ.டி பணியாளர்கள் உழைத்தார்களோ அந்த நிறுவனமே அவர்களைத் தகுதி அற்றவர்கள் என்ற முத்திரை குத்தி ஒரே நாளில் யூஸ் அண்ட் த்ரோ பேப்பர் போல வெளியே வீசி விடுகின்றது.

இது போன்று பெரிய அளவிலான பணி நீக்கங்களினால் பாதிக்கப்பட்டு வெளியேறும் ஐ.டி.ஊழியர்களின் நிலையை உணர்ந்த மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களின் ஊதியத்தை அடிமாட்டு(எதற்கும் பயன்படாத மாடு) விலைக்குப் பேசுகின்றன.

இந்தப் பணி நீக்கங்கள் ஐ.டி ஊழியர்களை பெரும் மன அழுத்தத்திற்கு தள்ளுகின்றன. இந்த மன அழுத்தம் அதிகமாகும் பொழுது அவர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த ஜெயபாலன் என்ற இளைஞர் சென்னை இராமனுஜம் தொழில்நுட்பப் பூங்காவிலுள்ள ஜெ.எல்.எல் (JLL) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் எந்தக் காரணமுமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதற்கு முந்தைய இரு மாதங்களின் சம்பளமும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் செல்போன் டவரின் மீதேறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நாம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடாது. ஐ.டி.பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகளில் இணைந்து நமது உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து போராடுவதுதான் தீர்வு. Forum for IT Employees (F.I.T.E), New Democratic Labour Front (NDLF), Knowledge Professional Forum (KPF) போன்ற அமைப்புகள் இன்று களத்தில் உள்ளன.

இதையும் படியுங்கள்: அழியும் நீர் ஆதாரங்கள்: என்ன செய்வது?

TCS பணி நீக்கத்திற்கெதிரான போராட்டம் சொல்லும் பாடம்:

2014 டிசம்பரில் 30,000 ஐ.டி ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக TCS நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து Forum for IT Employees (F.I.T.E) அமைப்பு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியது. அதுமட்டுமின்றி அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்தது. இதனால் சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் ஊழியரை TCS நிர்வாகம் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. F.I.T.E அமைப்பின் தொடர்ந்த போராட்டத்தினால் TCS நிர்வாகம் பணி நீக்கத்தை நிறுத்தியது. நாம் ஒன்று திரண்டு போராடினால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதே இதிலிருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.

அதே நேரத்தில் NDLF அமைப்பு ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுமா என ஓர் பொது நல வழக்கு தொடர்ந்தது. அண்மையில் இந்த வழக்கில் தமிழக அரசு ஐ.டி. பணியாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் செல்லும் எனக்கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

சட்டத்திற்குப் புறம்பான பணி நீக்கங்கள்:

இன்று காக்னிசென்ட் உள்ளிட்ட பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் செய்வது சட்டத்திற்குப் புறம்பான பணி நீக்கங்கள். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் நிறுவனங்கள் தொழிலாளர் நல ஆணையத்திற்கு தெரிவித்து அவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்பது சட்டம். இது போன்ற எந்த ஒரு சட்ட விதிமுறையையும் காக்னிசென்ட் நிறுவனம் பின்பற்றவில்லை.

“காக்னிசென்ட் நிறுவனம் உங்களைப் பணியிலிருந்து விலகச் சொல்லி நிர்பந்தித்தால் நீங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாதீர்கள். உங்களின் உரிமைக்காக நீங்கள் போராடுங்கள். முப்பது இலட்சம் ஊழியர்கள் உள்ளார்கள் நம்மோடு. இந்தப் போராட்டம் நமக்கு பணியினை மட்டும் மீட்டுக்கொடுக்கப் போவதில்லை; சுயமரியாதையையும் மீட்டுக்கொடுக்கும்” என்று இதற்காகக் குரல் கொடுத்துவரும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம் – ஃபைட் (Forum for IT Employees – FITE) அமைப்பின் நிர்வாகிகள் வசுமதி, அருணகிரி கூறுகிறார்கள்.

நேற்று டிசிஎஸ், ஐபிஎம், இன்று காக்னிசென்ட் , நாளை மற்ற ஐடி நிறுவனங்களிலும் வேலைநீக்கங்கள் நடக்கலாம். பக்கத்து குடிசைதானே எரிகின்றது என இல்லாமல் அனைத்து ஐடி ஊழியர்களும் ஒன்று திரண்டு போராடினால் தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

(விளக்கம்: இதைப் போன்ற விசேஷ பத்திகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளுக்கு எழுத்தாளர்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்; அவற்றை இப்போது டாட் காமின் கருத்துகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்; இப்போது டாட் காம் தமிழ்நாட்டில் சுதந்திரமான ஊடகவியலை வலுப்படுத்தும் சாதனம்; உங்களது கருத்துகளை editor@ippodhu.comக்கு எழுதுங்கள்.)

இதையும் படியுங்கள்: ஆப்பிள் போனும் பிராடா கேன்டியும்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்