மஹருக்கு செல்லும் பிரதமர் மோடியின் முடிவால் பாஜகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் உயர் சாதியினர் சிலர் அதிருப்தியடைந்தாலும் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கவிருக்கும் இந்த பயணம் புத்திசாலித்தனமான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

2014இல் மோட்ச பூமியாக கருதப்படும் வாரணாசியில் தொடங்கிய பிரதமர் மோடியின் பயணத்தில் தற்போது ஒரு திருப்பம் ஏற்பட்டு நரகத்தின் வாயிலாகக் கருதப்படும் கிழக்கு உத்திர பிரதேச நகரமான மஹருக்கு சென்றிருக்கிறார்.

பொதுதேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் கட்டவேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி பேசிவரும் நிலையில் ‘அனைவருக்குமான வளர்ச்சி’யில் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவருடைய ‘மனதின் குரல்’ உரையிலும் இந்த எண்ணம் வெளிப்பட்டது.

15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் மற்றும் துறவியான கபீர் குறித்து பேசிய மோடி, சாதி மத வேறுபாடுகளைக் கடந்து அறிவின் அடிப்படையில் அடையாளம் காணவேண்டும் என கபீர் கூறியுள்ளதாக சொன்னார்.

கபீர் மீது ஏற்பட்டுள்ள இந்த திடீர் காதலுக்கு என்ன காரணம் என பலர் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) மஹருக்கு சென்றார். கபீர் தாசரின் 500வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, வாரணாசி அருகே உள்ள மஹர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.

மஹருக்கு சென்ற பிரதமர் மோடியின் முடிவால் பாஜகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் உயர் சாதியினர் சிலர் அதிருப்தியடைந்தாலும் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கவிருக்கும் இந்த பயணம் புத்திசாலித்தனமான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

கோரக்புர் அருகே உள்ள சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள மஹர் மத நம்பிக்கையின் அடிப்படையில் வாரணாசிக்கு எதிர் துருவத்தில் உள்ளது.

‘வாரணாசிக்கு எதிரான மஹர்’ என்பது ஆதிக்க உயர் சாதி பார்ப்பனிய ஹிந்து மதத்திற்கு எதிரான கபீரின் கருத்துகளைக் குறிக்கும். வாரணாசியில் மரணித்தால் மோட்சம் அடைவோமென்றும் மஹரில் மரணித்தால் நரகத்திற்குச் செல்வோம் என்றும் இருந்த நம்பிக்கையை உடைக்க மஹரில் தனது உயிரைத் துறந்தார் கபீர். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களால் போற்றப்படும் கபீருக்கு ஒரு தர்காவும் ஒரு சமாதியும் உள்ளது.

வரலாற்று ரீதியாக கபீரைப் பின்பற்றுவோர் கபீர் பந்திகள் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள். வாரணாசி முதல் கோரக்புர் வரை உள்ள உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் தான் அவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

கபீரின் தந்தை ஒரு முஸ்லீம் நெசவாளர் என பெருவாரியாக நம்பப்படுவதால் முஸ்லீம்கள் மத்தியில் அவரை போற்றுபவர் அதிகம் உண்டு. குறிப்பாக ஏழை உழைக்கும் வர்க்கத்தினரான ‘ஜுலாஹா’ போன்றவர்கள். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பின்பற்றப்படும் ஒருவராக கபீர் இருப்பதால் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை ஆதரித்து வரும் ஏழை மக்களின் அரசியல் குறியீடாக அவர் இருக்கிறார்.

80 நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கும் அம்மாநிலத்தில் எழுந்துள்ள அதிருப்திகளுக்கு இடையே கபீரை ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்த நினைக்கிறது பாஜக.

பாஜக தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கருதும் தலித் மக்களிடையே கடந்த சில மாதங்களாக அதிருப்தி அதிகரித்துள்ளது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்ததை அடுத்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களிடையே புதிதாக ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுவதைத் தொடர்ந்து கோரக்புர், ஃபுல்புர் மற்றும்
கைரானா மக்களவை தொகுதிகளில் பாஜக தோற்றது.

அதிருப்திகளை சமாளிக்க பாஜக இன்னும் வியூகம் வகுக்கவில்லை என விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே, இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க கபீர் உதவலாம். தனது வசீகரத்தின் துணையோடு கபீரின் தர்காவில் வழிபாடு நடத்தியதும், மஹரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கபீரை வைத்து அரசியல் செய்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. “எங்களை பொறுத்தமட்டில் கபீர் தாஸ் நம்பிக்கை சார்ந்தவர்; அரசியல் சார்ந்தவர் அல்ல. அவர் கருத்துகளை நமது கட்சி என்றைக்கும்
போற்றியுள்ளது. ஏழை மக்களுக்காக கபீர் போராடியது போல் பாஜகவும் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறது” என்றார் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் சட்டமேலவை உறுப்பினரான விஜய் பஹதுர் பாதக்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பேச்சாளர் அகிலேஷ் பிரதாப் சிங், “கபீர் போலித்தனத்திற்கு எதிராக நின்றவர். அதேபோல பிரதமரின் போலித்தனமும் மஹரில் வெளிப்படும். இதுபோன்ற சூழ்ச்சிகளால் மக்களை
ஏமாற்ற முடியாது என்று கூறினார்.

14

எதிர்கட்சிகளுக்கு பதவிப் பேராசை

நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய கட்சியும், அதை எதிர்த்து போராடிய கட்சிகளும் உத்தரப் பிரதசத்தில் ஒன்றாக இணைந்து பதவிப் பேராசையுடன் ஏழை – எளிய மக்களை ஏமாற்றுகின்றன என பிரதமர் மோடி கூறினார்.

இன்று (வியாழக்கிழமை) கபீர் தாஸரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், பிரச்சார தொடக்கமாகவும் அவரது பேச்சு அமைந்தது.

நெருக்கடிநிலையை அமல்படுத்தியவர்களும், அதனை எதிர்த்து போராடியவர்களும் பதவி பேராசையுடன் இன்று கைகோர்த்து செயல்படுகின்றனர். சமாஜ்வாதி, பகுஜன் என்று பெயர் வைத்துக் கொண்டு ஏழை, எளிய மக்களை ஏமாற்றுவதே இந்த கட்சிகளின் குறிக்கோள் என்று பேசினார்.

தங்கள் அரசியல் லாபத்திற்காக, வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் எதிர்கட்சிகள் தடுத்து வருகின்றன. சமூகத்தை பலவீனமாக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணம்.

சில அரசியல் கட்சிகள் சமூகத்தில் வளர்ச்சி, அமைதி நிலவுவதை விரும்புவதில்லை. எப்போதும் கலவரத்தையும், மோதலையுமே விரும்புகின்றன. இதுபோன்ற அமைதியற்ற சூழல் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என அந்த கட்சிகள் எண்ணுகின்றன. ஆனால் இந்த நாட்டின் இயற்கை தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. கபீர், மகாத்மா காந்தி, பாலாசாகேப் அம்பேத்கர் ஆகியோரையே இந்த நாடு நம்புகிறது’’ என்றும் பிரதமர் மோடி பேசினார்.

Courtesy : News 18.com