ஏன் மத்திய அரசு தலைச்சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட்டை சேர்த்தது?

0
238

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது .

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் தலைசிறந்த 6 நிறுவனங்களை (Institute of Eminence) தேர்வு செய்தது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை உலகத்தர பல்கலைக்கழகங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி மும்பை) , டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி டெல்லி) ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங்களையும் மட்டும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 14 இடங்களுக்கு தகுதியான நிறுவனங்கள் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத்தர பல்கலைக்கழகம் தகுதி வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது .

இதனையடுத்து மத்திய அரசு உயர்கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இத்தகுதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்காக விண்ணப்பம் செய்த 11 நிறுவனங்களில் இருந்து ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

ஜியோ பல்கலைக்கழகம் ரூ.9600 கோடியில் அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

*உலகத்தரம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அரசு 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கும்.

*இந்த பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு உள்ளிட்ட எந்த ஒழுங்குமுறை அமைப்பும் கட்டுப்படுத்த முடியாது.

*மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 30% இடங்களை வெளிநாட்டவருக்கு ஒதுக்கி, விருப்பம் போல கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

*25% அளவுக்கு வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.

*உலகின் 500 முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தன்னிச்சையாக ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

*மொத்தத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி கல்வியை உலக அளவில் விற்பனை செய்து கோடிகளைக் குவிக்க முடியும்.

இந்த சலுகைகள் அனைத்தையும் தொடங்குபோதே அனுபவிப்பதற்காகத் தான் ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு இந்த தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here