இந்திய ரிசர்வ் வங்கி, ஏடிஎம்மில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பணம் வழங்கப்படாவிட்டால் அந்த பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியின் ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறையும், இதர வங்கி ஏடிஎம்மில் 3 முறையும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்று வங்கிகள் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ஏடிஎம்மில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏடிஎம்மில் பணம் இல்லாத சமயத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சிக்கும் போது அதற்கும் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதாக அல்லது இலவசமாக ஏடிஎம் பயன்படுத்தும் எண்ணிக்கையில் அது சேர்க்கப்படுவதாகவும் எங்களுக்கு புகார் வந்துள்ளது. 

ஆனால், இதுபோன்ற பணப்பரிவர்த்தனை முயற்சிகள் செயல் படாதபோது, அவற்றுக்கு கட்டணம் பிடித்தம் செய்யக் கூடாது.

இனி, தொழில்நுட்பக் கோளாறு, மென்பொருள் கோளாறு, தொலைத் தொடர்பு கோளாறு, ஏடிஎம்மில் பணம் இல்லாதது போன்ற வங்கி அல்லது ஏடிஎம் சேவை மையத்தின் தரப்பில் ஏற்படும் குறைபாடுகளால் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியாமல்  போகும் போது, அதற்காக அவர்களிடம் இருந்து எந்த வகையிலும் கட்டணத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது.

அது மட்டுமல்லாமல், பணம் எடுப்பதைத் தவிர, பண இருப்பை அறிவது, காசோலை கோருவது, வரி செலுத்துவது, பணப் பரிமாற்றம் போன்ற எதையும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது, அதற்கு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம், பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here