டெல்லி வங்கியாளர்கள் குழு, ஏடிஎம் மூலம் ஒரு முறை பணம் எடுத்துவிட்டு, 12 மணிநேர இடைவேளைக்குப் பின்பே மீண்டும் பணம் எடுக்க முடியும் என்ற விதிமுறையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது. 

நிதி சேவைகள் அமைச்சகத்துக்குப் அந்தக் குழு வழங்கியுள்ள பரிந்துரையில் நாட்டில் அதிகரித்து வரும் ஏடிஎம் மோசடிகளைத் தவிர்க்கும் நோக்கில் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 6 முதல் 12 மணிநேரம் இடைவெளியைக் கட்டாயமாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

டெல்லி வங்கியாளர் குழுவின் உறுப்பினரும் ஓரியண்டல் பேங்க் தலைமைச் செயல் அதிகாரியுமான முகேஷ் குமார் ஜெயின், “ஏடிஎம் மோசடிகள் பல இரவு நேரத்தில் நடக்கின்றன. குறிப்பாக நள்ளிரவிலோ விடிவதற்கு முன்போ நிகழ்கின்றன. எனவே, ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு இடையே குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதி, மோசடிகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கிறார். 

கடந்த வாரம் நடைபெற்ற டெல்லி வங்கியாளர் குழு கூட்டத்தில் இந்தத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதில் 18 வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். 

மேலும், ஓடிபி பாஸ்வேடு பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட இன்னும் சில பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கியுள்ளது. இதனிடையே, கனரா வங்கி, ஒரு நாளில் 10,000 ரூபாயக்கு மேல் பணம் எடுப்பதற்கு ஓடிபி பாஸ்வேட் கட்டாயம் என அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் 2018-19ஆம் ஆண்டில் 980 ஏடிஎம் மோசடிகள் நடந்திருக்கின்றன. முந்தைய ஆண்டில் 911 மோசடிகளை பதிவான நிலையில், ஓராண்டுக்குள் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகியுள்ளது. 

டெல்லியில் 179 ஏடிஎம் மோசடிகள் பற்றிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்சமாகும். மகாராஷ்டிராவில் மிக அதிக எண்ணிக்கையாக, 233 ஏடிஎம் மோசடிகள் நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில மாதங்களாக போலி ஏடிஎம் கார்டு மூலம் மோசடி நடப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த வழியில் நடக்கும் மோசடியில் வெளிநாட்டின் தொடர்பு நிறைய இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. 

இதுபோன்ற மோசடியில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த இடைவேளை பரிந்துரைக்கப்படுகிறது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் மின்னணு முறையில் பணம் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : timesofindia