(நவம்பர் 5, 2015இல் வெளியான செய்தி)

பிரித்திகா யாசினி எஸ்.ஐ ஆகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர், இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இவர் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
‘இப்போது’ சார்பாக வாழ்த்துக்களை பரிமாற தொடர்பு கொண்டால் அவரால் பேசவே முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் 3-ஆம் தேதி ‘பிரித்திகா யாசினி எஸ்.ஐ ஆகலாம்’ என்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஆனால், இன்னும் அதற்கான உத்தரவு அவர் கையில் கிடைக்கவில்லை. வெள்ளிக்கிழமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க. என்னால பேச முடியல. எல்லோரும் போன் பன்றாங்க. வாழ்த்துத் தெரிவிக்கிறாங்க.”, என சந்தோஷத்தில் வாயடைத்து போயிருக்கிறார். இருக்காதா? அவர் இந்த சந்தோஷத்தையும் வெற்றியையும் அடைய என்னென்ன தடைகளை தாண்டியிருக்கிறார் என தெரிந்தால்தான் அவருடைய சந்தோஷத்தை நாமும் கொண்டாட முடியும்.

பிரித்திகா யாசினி குறித்து ஏற்கனவே ‘இப்போது.காம்’ பதிவு செய்த நேர்காணல் இதோ:

”எஸ்.ஐ வேலைய கண்டிப்பா வாங்கியே தீருவேன். அப்படி இல்லன்னா ஐ.பி.எஸ் ஆயிடுவேன். எங்களுக்குத்தான் மத்தியில் இடஒதுக்கீடு இருக்கே.” என்று ஆரம்பத்திலேயே உற்சாகமாக ஆரம்பித்தார் ப்ரித்திகா. இவர் ’இப்போது’ சமூகத் தகவல் செயலியின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நொடியின் முக்கியத்துவத்தை பிரித்திகாவிடம் கேட்டால் சொல்லிவிடுவார். “இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ” எனும் வாய்ப்பை ஒரு நொடியில் தவறிவிட்டார் இவர். இருந்தாலும் எஸ்.ஐ. ஆகியே தீருவேன் என்ற மனஉறுதியுடன் இருக்கிறார். “எஸ்.ஐ தேர்வில் போட்டியிட்ட ஒரே ஒரு திருநங்கை நான்தான். ஆக, நான் ஒரு நொடி தாமதமாக ஓடியிருந்தாலும் என்னை சிறப்பு போட்டியாளராகக் கருதி தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தீர்க்கமாக இருக்கிறார், ப்ரித்திகா.

ப்ரித்திகா அவ்வளவு எளிதில் எஸ்.ஐ. போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதில் பங்கு கொள்ளவே பெரிய போட்டியைச் சந்தித்து இருக்கிறார். பிப்ரவரி மாதத்தில் எஸ்.ஐ. வேலைக்காக விண்ணப்பித்த ப்ரித்திகாவுக்கு தேர்வு நடக்கும் ஒரு வாரம் வரை நுழைவுச் சீட்டு வரவில்லை. நமக்கெல்லாம் எப்படி இருக்கும் ‘பக் பக்’ என்று. ப்ரித்திக்காவுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால், பயப்படவில்லை. நீதிமன்றத்தை நாடுகிறார் ப்ரித்திகா. தீர்ப்பு வருகிறது. எழுத்துத் தேர்வுக்கு 2 நாட்கள் முன்பு. தேர்வுக்கு முந்திய நாள் இரவு ‘நுழைவுச் சீட்டு’ வருகிறது.

ஜூலை 18 அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ப்ரித்திகா தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், அதிலும் ஒரு குழப்பம். முடிவில் அவருடைய ‘கட் ஆஃப்’ குறிப்பிடவில்லை. அவருடைய பாலினமும் குறிப்பிடவில்லை. திரும்பவும் போகிறார் நீதிமன்றத்துக்கு.

ஆகஸ்ட் 3,4,5 ஆகிய தேதிகளில் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. உடற்தகுதி தேர்வுக்கு 3ஆம் தேதிதான் அனுமதி அளிக்கிறது நீதிமன்றம். 4ம் தேதி காலை 6 மணிக்கு தேர்வுக்கு சென்றுவிட்டார் பிரித்திகா. ”கோடிங் சீட் வரல”,”உங்கள எந்த வரிசையில் உட்கார வைக்கிறது?” என்று சொல்லி 12 மணிக்குதான் அவருக்கான தேர்வுகள் நடக்கின்றன. நீளம், தாண்டுதல், குண்டு எறிதல் என எல்லாவற்றிலும் டாப்.

அப்புறம்? 100 மீட்டர் ஓட்டம். ஒரு நொடி தாமதமாக ஓடிவிட்டார். 17.5 நொடியில் ஓட வேண்டியதை 18.5 நொடிகள் ஒடிவிட்டார். இப்போது புரிகிறதா ஒரு நொடியின் மதிப்பு? அதையும் எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்கிறார். “அந்த ஒரு நிமிடத்தை எப்படி கணக்கிட்டார்கள்? அதை அவர்கள் நீதிமன்றத்துக்கு காண்பிக்கட்டும். அப்படியே நான் ஒரு நொடி தாமதமாக ஓடியிருந்தாலும் என்னை அவர்கள் சிறப்பு பிரிவாக கருதி வேலைக்கு நியமிக்க வேண்டும்.”, என்று முன்வைக்கிறார். நியாயம்தானே?

ஆனால், பிரித்திகா எஸ்.ஐ. கனவுடன் நிற்கப் போவதில்லை. “எஸ்.ஐ. ஆகலனா, ஐ.பி.எஸ். ஆயிடுவேன்.”, இதற்காக மனிதநேய அறக்கட்டளையில் தீவிர பயிற்சியில் ஈடுபட போகிறார் இவர்.

நல்ல முன் உதாரணம் ப்ரித்திகா. இதுவரை அவருடைய வழக்குகளை ஒரு பைசா கூட வாங்காமல் சுமுகமாக நடத்தி தந்திருக்கிறார்கள் அவருடைய வழக்கறிஞர்கள் ஷாஜு மற்றும் பவானி. இவருடைய தோழி பானுவும் இவருக்கு உதவியிருக்கிறார். பிரித்திகாவின் சுய அடையாளம் அவருடைய பெற்றோர் அவரை ‘ஒதுக்கினர்’. ஆனால், இப்போதோ, அவருடைய திறமை எல்லா ஊடகங்களிலும் வருகிறது. இப்போது இவருடைய பெற்றோரும், அண்ணனும் தொடர்பில் இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான தேர்வுகளில், திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதுதான் இந்த அலைக்கழிப்புக்குக் காரணம். மத்தியிலும் இதே பிரச்சனைதான். மூன்றாம் பாலினத்துக்கான தெளிவான வரையறை இல்லாததால் அவர்களை யுபிஎஸ்சி தேர்வுகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது. இதனைக் களைய உச்ச நீதிமன்றம் சரியான, தெளிவான வரையறைகளை சொன்னால் சிரமம் இல்லை. ஆனால், அப்படியே இருந்தாலும், ப்ரித்திகா போன்றவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட சமூக மாற்றமும் வேண்டும். அந்த மாற்றம் ஏற்பட்டால் விரைவிலேயே ப்ரித்திகாவை கம்பீரமான காவல் துறை அதிகாரியாக பார்க்கலாம். ப்ரித்திகாவை தூதுவராக நியமித்து ‘இப்போது’ பெருமை கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here