எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஒரு நாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு ரூ.20 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு நாளில் எஸ்பிஐ-யின் டெபிட் கார்டைக் கொண்டு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் எடுக்க முடியும். இந்த நடைமுறை அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நவம்பர் 1ம் தேதி முதல் ஏடிஎம்மில் உச்சபட்சமாக ரூ.20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
வரவிருக்கும் விழாக்காலங்களை மகிழ்ச்சியாகக் கொண்டாடத் தயாராகி வரும் எஸ்பிஐ  வாடிக்கையாளர்களுக்கு இது சற்று கவலை தரும் செய்தியாகவே அமையும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டில்  மோசடி நடப்பதாகக் கடந்த சில மாதங்களாக ஏராளமான புகார்கள் வருவதையடுத்து, இந்த நடவடிக்கையை எஸ்பிஐ வங்கி மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வங்கிகளுக்கு வந்திருக்கும் அறிவுறுத்தலில், டெபிட் கார்டு மோசடி குறித்து ஏராளமான புகார்கள் வரும் நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், வங்கிகளில் ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பிவைக்குமாறு வங்கிகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கி வாயில்களிலும் இது தொடர்பான அறிவிப்புப் பலகையை வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த மாற்றம் எஸ்பிஐ வங்கியால்  அளிக்கப்பட்ட கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஒரு வேளை இந்த அட்டை வைத்திருப்பவர்கள் தினமும் அதிகபட்ச தொகையை ஏடிஎம்மில் எடுக்க வேண்டும் என்றால் வங்கியைத் தொடர்பு கொண்டு அதிக உச்ச வரம்பு கொண்ட அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

courtesy:dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here